“நீட் தேர்வுக்கு படித்தால் தவறாகாது” - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி


“நீட் தேர்வுக்கு படித்தால் தவறாகாது” - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
x
தினத்தந்தி 20 Jun 2021 10:08 AM GMT (Updated: 20 Jun 2021 10:08 AM GMT)

நீட் தேர்வு இல்லை என நாளை அறிவிப்பு வந்தால் தயாரான மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை பெருங்குடியில் தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடத்தப்பட்டது. இதனை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் இந்த நிமிடம் வரை நீட் தேர்வு உள்ளது என்று குறிப்பிட்டார்.

கடந்த இரு தினங்களுக்கு முன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் இதே கருத்தை வலியுறுத்தி இருந்தார். அதை மீண்டும் சுட்டிக்காட்டி பேசிய அவர், வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், இந்த நிமிடம் வரை நீட் தேர்வு இருக்கத்தான் செய்கிறது என்று கூறினார்.

எனவே தற்போதைய சூழலில் நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகத் தான் வேண்டும் எனவும் நாளைய தினமே நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டால், தயாரான மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார். அதே நேரம் திமுக அரசு அமைத்து குறுகிய காலத்திற்குள் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் செய்து வருகிறது என்று தெரிவித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தேர்வு ரத்து அறிவிப்பு வராவிட்டால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், தேர்வுக்கு தயாராவது தவறில்லை என்று தெரிவித்துள்ளார்.

Next Story