அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜூலை 2 வரை நீதிமன்ற காவல்


அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜூலை 2 வரை நீதிமன்ற காவல்
x
தினத்தந்தி 20 Jun 2021 3:10 PM GMT (Updated: 20 Jun 2021 3:10 PM GMT)

பாலியல் புகாரில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை ஜூலை 2 ஆம் தேதி வரை நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை பெசன்ட்நகரில் வசித்து வருபவர் நடிகை சாந்தினி. நாடோடிகள் சினிமா படத்தில் நடித்துள்ளார். மலேசியா நாட்டின் குடியுரிமை பெற்ற இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த புகார் மனுவில், மணிகண்டன் என்னை திருமணம் செய்வதாக சொல்லி உறவு வைத்தார். 5 வருடங்கள் நானும், அவரும் கணவன்-மனைவி போல வாழ்ந்தோம். 3 முறை அவர் மூலம் கர்ப்பம் அடைந்தேன். அவரது மிரட்டலின் பேரில் கருவை கலைத்தேன். இப்போது என்னை திருமணம் செய்ய மறுத்து அவர் கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார், என்று தெரிவித்து இருந்தார்.

இந்த புகார் மனு மீது அடையாறு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினார்கள். மணிகண்டன் மீது 6 சட்டப்பிரிவுகளின் கீழ் அடையாறு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

 மணிகண்டன் முன்ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த மணிகண்டனை கைது செய்ய போலீசார் விரைந்தனர். அவரைப் பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில், நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை போலீசார் இன்று பெங்களூருவில் கைது செய்தனர். பெங்களூருவில் கைது செய்யப்பட்ட மணிகண்டன் சென்னை அடையாறு போலீஸ் நிலையம் அழைத்து வரப்பட்டார். அவரிடம் 2 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து,  மணிகண்டனை ஜூலை 2 ஆம் தேதி வரை நீதிமன்றக்காவலில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story