வெளிநாடு செல்வோருக்காக தமிழகம் முழுவதும் 75 தடுப்பூசி மையங்கள் உருவாக்கம் - சுகாதாரத்துறை தகவல்


வெளிநாடு செல்வோருக்காக தமிழகம் முழுவதும் 75 தடுப்பூசி மையங்கள் உருவாக்கம் - சுகாதாரத்துறை தகவல்
x
தினத்தந்தி 20 Jun 2021 4:20 PM GMT (Updated: 20 Jun 2021 4:20 PM GMT)

படிப்பு மற்றும் வேலை ரீதியாக வெளிநாடு செல்வோர் கோவிஷீல்டு 2-வது டோஸ் தடுப்பூசி போடுவதற்கான நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

சென்னை,

இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய்க்கு எதிராக கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. இந்த இரண்டு தடுப்பூசிகளும் 2 டோஸ்களாக மக்களுக்கு செலுத்தப்படுகின்றன. இதில் கோவேக்சின் முதல் டோஸ் செலுத்திக் கொண்டவர்கள் 4 முதல் 6 வார இடைவெளிக்குள் 2-வது டோஸ் கோவேக்சின் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதே சமயம் கோவிஷீல்டு தடுப்பூசி 6 முதல் 8 வாரம் இடைவெளியில் மக்களுக்கு செலுத்தப்பட்டது. பின்னர் இடைவெளியை 12 முதல் 16 வாரங்கள் வரை நீட்டிகலாம் என கோவிட் பணிக்குழு பரிந்துரை செய்தது. இதனால் தற்போது கோவிஷீல்டு தடுப்பூசிக்கான நெறிமுறை மாற்றப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக படிப்பு மற்றும் வேலை ரீதியாக வெளிநாடு செல்பவர்கள் கோவிஷீல்டு 2-வது டோஸ் தடுப்பூசியை செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் வெளிநாடு செல்ல விரும்புவோர், கோவிஷீல்டு 2-வது டோஸ் தடுப்பூசியை முன்கூட்டியே செலுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதன்படி தமிழகத்திலும் வெளிநாட்டிற்கு செல்பவர்கள் 2-வது டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசியை 28 நாட்களுக்குப் பிறகு செலுத்திக் கொள்வதற்கு தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வெளிநாடு செல்வோருக்காக தமிழ்நாடு முழுவதும் 75 தடுப்பூசி மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு சென்று அவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்றும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் விவரங்கள் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Next Story