‘‘பெட்ரோல்-டீசல் மீதான வரியை குறைக்க சாத்தியம் இல்லை” நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி


‘‘பெட்ரோல்-டீசல் மீதான வரியை குறைக்க சாத்தியம் இல்லை” நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி
x
தினத்தந்தி 20 Jun 2021 9:11 PM GMT (Updated: 20 Jun 2021 9:11 PM GMT)

‘‘தமிழகத்தில் பெட்ரோல்-டீசல் மீதான வரியை குறைக்க இப்போது சாத்தியமில்லை’’ என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

சென்னை,

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வரியை குறைக்க...

கடும் பொருளாதார சூழலிலும் கொரோனா நிவாரணமாக தி.மு.க. அரசு தலா ரூ.4 ஆயிரம் நிதி உதவியை 2 கட்டங்களாக பொதுமக்களுக்கு வழங்கி இருக்கிறது. இதனால் அரசுக்கு ரூ.9 ஆயிரம் கோடி செலவு ஏற்பட்டிருக்கிறது.

அதேவேளை அரசின் நிதிநிலைமை குறித்து ஒரு வெள்ளை அறிக்கை வெளியாகும் என்று சொல்லியிருந்தோம். இன்னும் 2 வாரங்களுக்குள் அது வெளியாகும். பெட்ரோல்-டீசல் விலையில் ‘வாட்’ வரியை ஓரளவு குறைக்க முயற்சி செய்வோம் என கூறியிருந்தோம். உறுதியாக செய்வோம். ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையில் அது சாத்தியமில்லை.

பிரச்சினைகள்

2014-ம் ஆண்டு மத்திய பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, பெட்ரோல் ஒரு லிட்டருக்கான வரியை 10 ரூபாய் 39 பைசாவில் இருந்து 32 ரூபாய் 90 பைசா என உயர்த்தியிருக்கிறார்கள். 3 மடங்குக்கு மேல் வரியை உயர்த்தியிருக்கிறார்கள். இதனால் மாநில அரசு வரி குறைப்பதிலும் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.10.39 ஆக இருந்தபோதே, கிட்டத்தட்ட 40 முதல் 45 சதவீதம் மாநிலங்களுக்கு பகிரக்கூடிய நிதி அளவாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இப்போது ஏதேதோ காரணங்கள் சொல்லி ஒரு பைசா கூட மாநிலங்களுக்கு வழங்காமல், அந்த வரி தொகையை மத்திய அரசே முழுமையாக எடுத்து கொள்கிறது.

2019-20-ம் ஆண்டில் மத்திய அரசு கையாண்ட பெட்ரோல்-டீசல் மீதான வரி ரூ.2.40 லட்சம் கோடி, 2020-21-ம் ஆண்டில் ரூ.3.90 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. அதாவது 63 சதவீதம் உயர்ந்துள்ளது. இதில் மாநில பங்காக தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய ரூ.336 கோடி குறைந்திருக்கிறது. பெட்ரோல் பங்குகளில் விலை, வரி அதிகரித்தபோதும், தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய பங்குகள் குறைந்துள்ளன. இந்த ஆண்டு இதன் அளவீடு இன்னும் குறைந்திருக்கிறது.

கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும்...

ஒரு காலத்தில் கச்சா எண்ணெய் பேரலுக்கு 112 டாலர் என்று இருந்தது. அப்போது மொத்த பெட்ரோல் வரி லிட்டருக்கு ரூ.69 தான். மாநிலத்தின் வருமானம் ரூ.14.47. 2015, 2020-ம் ஆண்டுகளில் இது 40 டாலர் என்றானது. ஆனால் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.98. இதில் தமிழக அரசின் பங்கு ரூ.23. மீதமுள்ள தொகை உற்பத்தி மற்றும் மத்திய அரசாங்கத்தினுடையது ஆகும்.

டீசலை பொறுத்தவரையில் தமிழக அரசின் வரி ரூ.17 தான். மீதமுள்ள ரூ.72, மத்திய அரசு மற்றும் அது நடத்தும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும் செல்கிறது. 2011-ம் ஆண்டு 112 டாலராக கச்சா எண்ணெய் பேரல் விலை இருந்தபோது, ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.43.99 தான். இன்று வெறும் 44 டாலருக்கு கச்சா எண்ணெய் இருக்கும்போது, டீசல் விலை ரூ.92 ஆக உயர்ந்திருக்கிறது. இது எப்படி நியாயமாகும். மற்ற மாநில அரசுகளை ஒப்பிடும்போது, தமிழக அரசு குறைவாகத்தான் பெட்ரோல்-டீசலில் இருந்து வரி எடுக்கிறது.

எப்படி அரசை நடத்துவது?

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், இமாசலபிரதேசம், மேற்கு வங்காளம், அருணாசலபிரதேசம், மேகாலயா, திரிபுரா போன்ற மாநிலங்கள் மத்திய அரசுக்கு ரூ.1 கொடுத்தார்கள் என்றால், ரூ.10 வரை வரியை திருப்பி வாங்குகிறார்கள். தமிழகத்தை பொறுத்தவரை மத்தியில் இருந்தும் வராது, இங்கேயும் விலை உயர்த்தக்கூடாது என்றால் எப்படி அரசை நடத்துவது?

பா.ஜ.க. அரசு ஆட்சிக்கு வந்தபோது, செஸ் வரி மொத்த வரி வருமானத்தில் வெறும் 12 சதவீதமாகவே இருந்தது. மீதமுள்ள 88 சதவீதம் பகிர்ந்தளிக்கப்பட்டது. இன்றைக்கு எல்லாமே செஸ் வரி என போட்டு, கிட்டத்தட்ட 3 மடங்காக உயர்த்தி இருக்கிறார்கள். பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய தொகையையும் வெகுவாக குறைத்துவிட்டார்கள். இதனால் தான் எங்களால் பெட்ரோல்-டீசல் விலையை உடனடியாக குறைக்க முடியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story