கருணாநிதியால் தொடங்கப்பட்ட உழவர் சந்தைகளுக்கு புத்துயிர் அளித்து தமிழகம் முழுவதும் தொடங்கப்படும் சட்டசபையில் கவர்னர் உரை


கருணாநிதியால் தொடங்கப்பட்ட உழவர் சந்தைகளுக்கு புத்துயிர் அளித்து தமிழகம் முழுவதும் தொடங்கப்படும் சட்டசபையில் கவர்னர் உரை
x

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட உழவர் சந்தைகளுக்கு புத்துயிர் அளிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் உழவர் சந்தைகள் அமைக்கப்படும் என்றும், விவசாயிகளின் நலனைப் பாதுகாக்க அரசின் மேற்பார்வையில் கிராமப்புறச் சந்தைகள் உருவாக்கப்படும் என்றும் கவர்னர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் தடுப்பூசி போடும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. ஆனால், மத்திய அரசால் வழங்கப்படும் தடுப்பூசியின் ஒதுக்கீடு போதுமானதாக இல்லை. எனவே, தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கையை உயர்த்திட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

தமிழ் மொழியின் பெருமையைப் போற்றும் வகையில், தமிழ் மொழியை இந்திய அலுவல் மொழிகளில் ஒன்றாக அறிவிக்க மத்திய அரசை இந்த அரசு தொடர்ந்து வலியுறுத்தும்.

தமிழ்நாட்டிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் உட்பட அனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும் தமிழ்மொழி இணை-அலுவல் மொழியாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், இதற்காக அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 343-ல் உரிய திருத்தங்களை மேற்கொள்ளவும் மத்திய அரசை வலியுறுத்தும்.

இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை

சென்னையிலுள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு புத்துயிர் அளிக்கப்படும். இந்த நிறுவனத்தை வேறு எந்தப் பல்கலைக்கழகத்துடனும் இணைக்காமல், அதன் தன்னாட்சி நிலை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசை இந்த அரசு வலியுறுத்தும்.

ஈழத் தமிழர்களுக்கு சம குடிமை சார் மற்றும் அரசியல் உரிமைகளை உறுதி செய்திட, இலங்கை அரசை அறிவுறுத்துமாறு மத்திய அரசு வலியுறுத்தப்படும். இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க தேவையான சட்டங்களையும் சட்டத் திருத்தங்களையும் மேற்கொள்ளுமாறும் இந்த அரசு மத்திய அரசை வற்புறுத்தும்.

உழவர் சந்தைகள்

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட உழவர் சந்தைகளுக்கு புத்துயிர் அளிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் அத்தகைய உழவர் சந்தைகள் அமைக்கப்படும். விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதற்காக, அரசின் மேற்பார்வையில் கிராமப்புறச் சந்தைகள் உருவாக்கப்படும்.

கோவிட் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காலத்தில், வாகனங்கள் மூலம் மக்களுக்கு அவர்கள் வீட்டிலேயே காய்கறிகளும் பழங்களும் விற்பனை செய்யப்பட்டன. பொதுமக்களிடையே பெருமளவில் வரவேற்பு பெற்ற இத்திட்டத்தை விரிவுபடுத்தி, தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

நிலத்தடி நீரை பாதுகாக்க புதிய சட்டம்

தமிழ்நாடு போன்ற நீர்ப் பற்றாக்குறை உள்ள மாநிலத்திற்கு நீர்வள மேலாண்மை மிகவும் முக்கியமானதாகும். எனவேதான், நீர்வளங்களுக்கென ஒரு தனி அமைச்சகம் இந்த அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீரைச் சார்ந்துள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலனைப் பாதுகாப்பதற்காக, நிலத்தடி நீர்ப் பயன்பாட்டை முறைப்படுத்துவதற்கான புதிய சட்டம் ஒன்று இயற்றப்படும். இளைஞர்களின் ஆர்வத்தையும் ஆற்றலையும் பயன்படுத்தி, தமிழ்நாட்டிலுள்ள நீர்வளங்கள் மீட்டெடுக்கப்பட்டு, பாதுகாக்கப்படும்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை மீட்டெடுப்பதற்கான திட்டங்களை வகுப்பதற்காக, தொழிலதிபர்கள், வங்கியாளர்கள், நிதித்துறை வல்லுநர்கள், அரசு அலுவலர்கள் ஆகியோர் அடங்கிய நிபுணர் குழு அமைக்கப்படும். தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்களை வகுக்க நீதியரசர் ரத்னவேல்பாண்டியன் தலைமையில் குழு அமைத்து, அதன் பரிந்துரைகளின்படி முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி எடுத்த நடவடிக்கைகள் போன்றே, சென்னை-கன்னியாகுமரி தொழில் பெருவழியிலும், சென்னை-பெங்களூரு தொழில் பெருவழியிலும் அமைந்துள்ள தொழில் வளர்ச்சி குறைவாக உள்ள வட மாவட்டங்களில், அதிக வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தக்கூடிய தொழில் நிறுவனங்களைத் தொடங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுக்கும்.

வெள்ளநீர் மேலாண்மைக் குழு

மாநிலத்திலுள்ள அனைத்து மின் நுகர்வோருக்கும் தடையின்றி மின்சாரம் வழங்குவதை உறுதி செய்வது இந்த அரசின் முக்கிய நோக்கமாகும். கடந்த சில ஆண்டுகளிலிருந்த தவறான நிர்வாகத்தால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமும், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகமும் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன. இவ்விரு கழகங்களின் நிதிநிலை மற்றும் நிர்வாகக் கட்டமைப்பு குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும்.

நகர்ப்புர நிர்வாகத் திறனை மேம்படுத்துவதற்காகவும், போக்குவரத்து மற்றும் குடிநீர் வழங்கல் உள்ளிட்ட முக்கியத் துறைகளில் குடிமக்களுக்கு சேவைகளை சிறப்பாக வழங்கவும், ஒரு புதிய மாதிரித் திட்டம் உருவாக்கப்படும். வெள்ளக் கட்டுப்பாட்டு முறைகளை வகுக்கவும், வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கவும், வெள்ளநீர் வடிகால்களை வடிவமைக்கவும், சுற்றுச்சூழல், நகரத் திட்டமிடல், பேரிடர் மேலாண்மை ஆகிய துறைகளின் வல்லுனர்களை உள்ளடக்கிய ‘சென்னைப் பெருநகர வெள்ளநீர் மேலாண்மைக் குழு’ அமைக்கப்படும்.

69 சதவீத இட ஒதுக்கீடு

தற்போது தமிழ்நாட்டில் வழங்கப்படும் 69 சதவீத இடஒதுக்கீடு தொடர்ந்து பாதுகாக்கப்படும். மத்திய அரசின் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில், சமூகப் பொருளாதார நிலையில் முன்னேற்றம் அடைந்தவர்களை நிர்ணயிப்பதற்கான வருமான அளவுகோல்களை நீக்கவும், அவை நீக்கப்படும் வரையில், தற்போதைய வருமான வரம்பினை 8 லட்சம் ரூபாயிலிருந்து 25 லட்சம் ரூபாயாக உயர்த்தவும், இந்த அரசு மத்திய அரசை வலியுறுத்தும். வெவ்வேறு சமூகங்களின் பின்தங்கிய நிலையை நிர்ணயிப்பதில், மாநில அரசின் அதிகாரம் எவ்வகையிலும் பாதிக்கப்படாமல் இருப்பதையும் இந்த அரசு உறுதி செய்யும்.

அரசுப் பணிகளில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி சிறப்பு நியமனங்களின் மூலம் நிரப்பப்படும். பழங்குடியினர் சான்றிதழ்களை வழங்கும் செயல்முறை எளிமைப்படுத்தப்பட்டு, விரைவுபடுத்தப்படும்.

திருநங்கைகளுக்கு திறன் பயிற்சி

கல்வி முன்னேற்றம், பொருளாதார மேம்பாடு மற்றும் வீட்டுவசதிகளை சிறுபான்மையினர் எளிதில் பெறுவதற்கான திட்டங்களை, சச்சார் குழுவின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த அரசு திறம்பட செயல்படுத்தும். உரிய நிர்வாக மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகள் மூலமாக வக்பு வாரியத்தின் நிலங்கள் பாதுகாக்கப்படும்.

மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் 2016-ன் விதிகள் திறம்பட நடைமுறைப்படுத்தப்படும். இவர்களுக்கான பராமரிப்பு, மறுவாழ்வு மற்றும் ஆதரவளிக்கும் திட்டங்களின் பயன்கள் சரியாகச் சென்றடைவதை உறுதி செய்வதற்காக, அதிக இடங்களில் களப்பணியாற்றிடும் வகையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வலுப்படுத்தப்படும். திருநங்கைகளின் வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த, வேலைவாய்ப்பு பெறுவதற்கும், தொழில் தொடங்குவதற்கும் ஏற்ற வகையில் திறன் பயிற்சி அளிக்கப்படும்.

விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கம்

ஒலிம்பிக் போட்டிகள் போன்ற சர்வதேசப் போட்டிகளில் அதிகப் பதக்கங்களை வெல்வதற்குத் தேவையான, உயர்மட்ட செயல்திறன் பயிற்சி, ஊக்கத்தொகை, போட்டிகளில் பங்கேற்பதற்கான பயணச் செலவுகள் ஆகியவை நமது மாநிலத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும். அரசுத் துறைகளில் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ் விளையாட்டு வீரர்களின் பணி நியமனம் திறம்பட செயல்படுத்தப்படும்.

அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் நலனை இந்த அரசு தொடர்ந்து பாதுகாக்கும். அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான புதிய காப்பீட்டுத் திட்டத்தின் பலன்கள் மேலும் உயர்த்தப்பட்டு, செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story