போக்குவரத்து துறையில் 85 சதவீத ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்


போக்குவரத்து துறையில் 85 சதவீத ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்
x
தினத்தந்தி 21 Jun 2021 10:08 PM GMT (Updated: 21 Jun 2021 10:08 PM GMT)

தமிழக அரசின் போக்குவரத்து துறையில் 85 சதவீத ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றும், மீதமுள்ளவர்களுக்கு விரைவில் செலுத்தப்படும் என்றும் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.

சென்னை,

ஊரடங்கு புதிய தளர்வுகள் நேற்று அமலுக்கு வந்தன. கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்த சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பஸ் போக்குவரத்து நேற்று மீண்டும் தொடங்கியது.

எனவே சென்னை பல்லவன் இல்ல பணிமனையில் இருந்து இயக்கப்பட்ட மாநகர பஸ்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணியை போக்குவரத்து துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது போக்குவரத்து துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா, மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் அன்பு ஆபிரகாம், அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் ஜோசப் டையஸ், தனி அலுவலர் திருவாம்பலம் பிள்ளை ஆகியோர் உடன் இருந்தனர்.

சென்னையில் 1,792 பஸ்கள் இயக்கம்

பின்னர் பேட்டி அளித்த அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியதாவது:-

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் இடையே பொது பஸ் போக்குவரத்து அரசின் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 50 சதவீத இருக்கைகளுடன் இன்று (நேற்று) முதல் தொடங்குகிறது.

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் ஏறத்தாழ 2 ஆயிரத்து 800 பஸ்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஆயிரத்து 792 பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன.

விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் 750 பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன. உரிய நேரத்தில் பஸ்களை இயக்கிட வேண்டும் என்று இந்த 2 போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

விரைவில் தடுப்பூசி

பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் பொதுமக்களோடு அதிக தொடர்புடையவர்கள் என்பதால் அவர்கள் கொரோனா தடுப்பூசியை தவறாமல் செலுத்திக்கொள்ள வேண்டும். அனைத்து அரசு போக்குவரத்து கழகத்தைச் சேர்ந்த 85 சதவீத பணியாளர்களுக்கு இதுவரையில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கும் விரைவில் தடுப்பூசி செலுத்தப்படும்.

மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் ஏறத்தாழ 2 ஆயிரத்து 300 பயணிகளுக்கு கடந்த மாதம் 16-ந் தேதி முதல் கடந்த 15-ந் தேதி வரை வழங்கப்பட்ட மாதாந்திர பயண அட்டை மூலம் வருகிற ஜூலை 15-ந் தேதி வரை பயணம் செய்யலாம். பயணிகள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். டிரைவரும், கண்டக்டரும் வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story