பல ரேஷன் கடைகளில் தட்டுப்பாடு: மளிகை தொகுப்புடன் நிவாரண தொகை வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும்


பல ரேஷன் கடைகளில் தட்டுப்பாடு: மளிகை தொகுப்புடன் நிவாரண தொகை வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும்
x
தினத்தந்தி 23 Jun 2021 7:18 PM GMT (Updated: 23 Jun 2021 7:18 PM GMT)

பல ரேஷன் கடைகளில் தட்டுப்பாடு: மளிகை தொகுப்புடன் நிவாரண தொகை வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்.

சென்னை,

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி, கொரோனா கொடுந்தொற்று காலத்தில் வாழ்வாதாரம் இழந்து தவித்த அரிசி அட்டை வைத்துள்ள குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, முதல் தவணை ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ள நிலையில், 2-வது தவணையும், அதனுடன் 14 பொருட்கள் அடங்கிய மளிகைத் தொகுப்பும் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இந்தச் சூழ்நிலையில், பல மாவட்டங்களில் நிவாரண நிதி மட்டுமே கொடுக்கப்படுவதாகவும் மளிகைத் தொகுப்பு கொடுக்கப்படுவதில்லை என்றும், செய்திகள் வருகின்றன. சில இடங்களில், மளிகைத் தொகுப்பில் குறைவான பொருட்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மளிகைத் தொகுப்பு பெறாதவர்களுக்கும் ரேஷன் கடை ஊழியர்களுக்கும், சில சமயங்களில் வாக்குவாதம் ஏற்படுவதாகவும் தெரிய வருகிறது. எனவே, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் தனிக் கவனம் செலுத்தி, அனைவருக்கும் மளிகைத் தொகுப்புடன் கூடிய நிவாரணத் தொகை கிடைக்கவும், ஏற்கனவே நிவாரணத் தொகை மட்டும் பெற்றுக்கொண்டவர்களுக்கு மளிகைத் தொகுப்பு வழங்குவதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story