மாநில செய்திகள்

‘நீட்’ தேர்வை ரத்து செய்யும் விவகாரம் சட்டசபையில் காரசார விவாதம் பா.ஜனதா ஆதரவு அளிக்குமா? மு.க.ஸ்டாலின் கேள்வி + "||" + Will the BJP support the heated debate in the Assembly on the issue of cancellation of 'Need' election? MK Stalin's question

‘நீட்’ தேர்வை ரத்து செய்யும் விவகாரம் சட்டசபையில் காரசார விவாதம் பா.ஜனதா ஆதரவு அளிக்குமா? மு.க.ஸ்டாலின் கேள்வி

‘நீட்’ தேர்வை ரத்து செய்யும் விவகாரம் சட்டசபையில் காரசார விவாதம் பா.ஜனதா ஆதரவு அளிக்குமா? மு.க.ஸ்டாலின் கேள்வி
‘நீட்’ தேர்வை ரத்து செய்யும் விவகாரம் தொடர்பாக சட்டசபையில் காரசார விவாதம் நடந்தது. அப்போது ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய பா.ஜனதா ஆதரவு அளிக்குமா? என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
சென்னை,

தமிழக சட்டசபையில் நேற்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது.

இந்த விவாதத்தில் பங்கேற்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-


நீட் தேர்வு விவகாரம்

நீட் தேர்வை பொறுத்தவரைக்கும் கடந்த காலத்தில் தி.மு.க. நிர்வாகிகள், அ.தி.மு.க. அரசு நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஒரு கருத்தை சொன்னார்கள். 2010-ம் ஆண்டு டிசம்பர் 21-ந் தேதி இந்திய மருத்துவ கவுன்சில் ஒரு அறிவிப்பாணையை வெளியிட்டது. மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சரே ஒரு வாரத்துக்கு முன் பேட்டி கொடுக்கும்போது குறிப்பிட்டு காட்டினார்.

அப்போது அ.தி.மு.க. ஆட்சி இல்லை. தி.மு.க.தான் ஆட்சியில் இருந்தது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது.

ஜனாதிபதி கையெழுத்திட்ட ஆவணம்

அமைச்சர் மா.சுப்பிரமணியன்: தமிழகத்தில் நீட் யார் ஆட்சியில் வந்தது?. நீட் யார் ஆட்சியில் மாணவர்கள் அவதிக்குள்ளானார்கள்? என்ற விவரங்களை தமிழக மக்கள் நன்றாக அறிவார்கள். எதிர்க்கட்சி தலைவர் கடந்த முறை முதல்-அமைச்சராக இருந்தபோது நீட்டுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்காத விஷயத்தை எங்கேயாவது, எப்போதாவது ஒப்புக்கொண்டாரா? அதற்கான ஆவணங்களை எப்போதாவது தந்திருக்கிறாரா?, நீட்டிற்கு ஒப்புதல் தர முடியாது என்று அன்றைய ஜனாதிபதி கையெழுத்திட்டு தந்த ஆவணம் என்னிடம் இருக்கிறது.

இதைத்தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் நீட் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்காதது மட்டுமல்ல, உள்துறை அமைச்சகம் திருப்பி அனுப்பிய தகவலையும் பதிவு செய்திருக்கிறது. இந்த 2 விவரங்கள் கடந்த 4 ஆண்டுகளில் எப்போதாவது பேரவையில் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா? அன்றைக்கு அ.தி.மு.க., தி.மு.க. உறுதுணையோடு நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களையும் நிறைவேற்றுவதற்கு எந்த அழுத்தமாவது ஜனாதிபதியை சந்தித்து தந்திருக்கிறாரா? இங்கிருந்து கடிதங்களை எழுதி இருக்கிறாரே தவிர, நேரடியாக சென்று ஜனாதிபதியிடமோ அல்லது மத்திய உள்துறை அமைச்சகத்திடமோ தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 2 சட்ட முன்வடிவுகளை நீங்கள் நிறைவேற்றி தர வேண்டும் என்ற கோரிக்கையை எப்போதாவது எடுக்கப்பட்டிருக்கிறதா?

விளக்கம் அளிக்க தயார்

2010-ம் ஆண்டு நீட் தொடர்பாக மத்திய அரசு அதற்கான சட்ட முன்வடிவை தயாரித்து தந்தபோது, தமிழக முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி, நீதிமன்றத்துக்கு சென்று தடையாணை பெற்றதோடு மட்டுமல்லாமல், ஜனாதிபதியிடமும் அனுமதி பெற்று அன்றைக்கு அதை தமிழகத்தில் வரவிடாமல் செய்தார். தி.மு.க. ஆட்சியில் இருக்கிற வரை நீட் தமிழகத்தில் வரவே இல்லை. அ.தி.மு.க. கட்சியின் தலைவராக இருந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இருக்கும் வரைகூட தமிழகத்தில் நீட் என்பது வரவே இல்லை. எதிர்க்கட்சி தலைவர், முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகுதான் நீட் தேர்வு தமிழகத்தில் தலைதூக்கியது. இதை யாராலும் மறுக்க முடியுமா? 2017-ம் ஆண்டுக்கு பிறகு கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று கொண்டிருக்கிற நீட் தேர்வுக்கு முழு காரணம் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் இவர் (எடப்பாடி) தலைமையிலான அந்த ஆட்சி நிர்வாகத்தில்தான் என்பது அனைவருக்கும் தெரியும்.

எந்தெந்த தேதியில் என்னென்ன ஆவணங்கள் அனுப்பப்பட்டது, அதற்கு மத்திய அரசு என்ன பதிலை சொல்லி இருக்கிறது, அதற்கு எப்படி நாம் மவுனியாக இருந்தோம், அந்த நீட் தேர்வுக்கு தமிழகத்தில் விலக்கு அளிப்பதற்கு எந்த வகையிலான அழுத்தமும் தராமல் இருந்தோம் என்கின்ற காரணங்களை விளக்குவதற்கு நீண்டநேரம் ஆகும். அவர் தயாராக இருந்தால், நான் விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறேன்.

ராஜன் தலைமையில் குழு

உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி:- எதிர்க்கட்சி தலைவர் வரலாற்றை கொஞ்சம் திரும்பி பார்க்க வேண்டும். அ.தி.மு.க. ஆட்சியில்தான் நுழைவு தேர்வு என்ற ஒன்று இருந்தது. மெடிக்கல், என்ஜினீயரிங் செல்ல நுழைவு தேர்வு இருந்தது. ஆனால் கருணாநிதி, முதல்-அமைச்சர் ஆனபிறகுதான் அனந்தகிருஷ்ணன் தலைமையில் ஒரு தணிக்கை குழுவை போட்டு நுழைவு தேர்வே தமிழகத்தில் நுழையாமல் பண்ணியவர் கருணாநிதி ஆட்சியில்தான். ஆனால் நீங்கள் ஒரு சட்டம் போட்டீர்கள். அடுத்து ஜனாதிபதியின் கையெழுத்து வாங்கி வந்ததும் கருணாநிதி ஆட்சியில்தான்.

நுழைவு தேர்வே எதற்கும் இல்லை என்ற முறையை கொண்டு வந்தது கருணாநிதி. ஆனால் நீங்கள் சட்டம் போடுகிறமாதிரி போடுவது, அதாவது நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன் நீங்கள் அழுகிற மாதிரி அழ வேண்டும் என்று நீங்கள்தான் ஏமாற்றினீர்கள். தி.மு.க. ஆட்சியில் நீட் தேர்வு நுழையவே இல்லை என்பதுதான் உண்மை. நுழைவு தேர்வை கண்டிப்பாக எதிர்ப்பதற்காகத்தான் ராஜன் தலைமையில் முறையாக ஒரு குழுவையும் முதல்-அமைச்சர் நியமித்து அது சட்டம் மூலமாக செல்லுபடியாக்க வேண்டும் என்ற நிதானமான அடிப்படையில் நீட் தேர்வை எதிர்த்து கொண்டிருப்பவர்தான் தமிழக முதல்-அமைச்சர் என்பதை எதிர்க்கட்சி தலைவருக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

தி.மு.க. எதிர்த்தது

எடப்பாடி பழனிசாமி:- 2010-ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது தி.மு.க. அந்த கூட்டணியில் இருந்தது. அப்போதுதான் நீட் கொண்டு வரப்பட்டது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்:- நீட் கொண்டு வந்தது நாங்க தான்... நாங்கதான் என திரும்ப திரும்ப எதிர்க்கட்சி தலைவர் சொல்லி கொண்டிருக்கிறார். ஏற்கனவே அவர் முதல்-அமைச்சராக இருந்தபோது, நான் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது இதே குற்றச்சாட்டை திரும்ப திரும்ப சொன்னார். அப்போது நான் பதில் சொன்னேன். இப்பவும் சொல்கிறேன். தி.மு.க.வை பொறுத்தவரை கூட்டணியில் இருந்தபோது விரும்புகிற மாநிலங்கள் அதை நிறைவேற்றலாம். கட்டாயம் கிடையாது. அப்போது நாங்கள் எதிர்த்தோம். தலைவர் கருணாநிதி சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்று அதற்கு தடை வாங்கினார்.

நிச்சயம் விலக்கு வாங்குவோம்

அதற்கு பிறகு, கட்சிகளையெல்லாம் மறந்து, இதே அவையில் 2 பேரும் அதாவது ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் சேர்ந்து சட்ட மசோதா நிறைவேற்றி இருக்கிறோம். 2 முறை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதை அவர் திருப்பி அனுப்பி வைத்துவிட்டார். அந்த செய்தி சட்டமன்றத்துக்கு எப்போது வந்தது? அதைத்தான் மக்கள் நல்வழ்வு துறை அமைச்சர் இங்கே சுட்டிக்காட்டினார். அதனால்தான், தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொல்லி இருக்கிறோம். நீட் நீக்கப்படும் என்று சொல்லவில்லை. நீட் நீக்குவதற்கான முயற்சிகளில் தி.மு.க. நிச்சயம் ஈடுபடும் அப்படி என்கிற உறுதிமொழி கொடுத்திருக்கிறோம். அதில் எந்த மாற்றமும் கிடையாது, பின்வாங்கவும் மாட்டோம். அதனால்தான், இதை எப்படி நிறைவேற்றுவது, எப்படி விலக்கு பெறுவது? ஏற்கனவே பிரதமரிடம் வைத்துள்ள கோரிக்கைகளில் இதையும் சொல்லி இருக்கிறோம்.

ஒரு முறைக்கு 2 முறை அழுத்தமாக சொல்லிவிட்டு வந்திருக்கிறேன். காரணம், தமிழகத்தில் உள்ள மாணவர்களின் உயிர்நாடி பிரச்சினை இது. எத்தனை பேரை இழந்திருக்கிறோம் நாம். அதனால்தான் இதை முறையாக நீதிமன்றத்தில் எப்படி அணுகுவது என்பதெல்லாம் யோசித்து, சிந்தித்து ஓய்வுபெற்ற நீதிபதி ராஜன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்குள் அந்த குழு அறிக்கை அளிக்க வேண்டும். அதை வைத்து சட்டப்படி நிச்சயம் நடவடிக்கை எடுப்போம். நீட் பொறுத்தவரை எந்த காரணத்தை கொண்டும் தி.மு.க. எப்போதும் துணை நிற்காது. நிச்சயம் தமிழகத்திற்கு விலக்கு வாங்குவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

நம்பிக்கை இருக்கிறது

எடப்பாடி பழனிசாமி:- இந்த ஆண்டு நீட் தேர்வு நடக்குமா? நடக்காதா?

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்:- ரத்து செய்வதற்கான முயற்சியில் நாங்கள் ஈடுபட்டு இருக்கிறோம். எனவே அதில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. நீங்களும் தோள் கொடுங்கள், துணை நில்லுங்கள். நிச்சயமாக வெற்றிபெறுவோம்.

குரல் கொடுக்க தயாரா?

நயினார் நாகேந்திரன் (பா.ஜ.க.): நீட் தேர்வை பொறுத்தவரை மாணவர்கள் தயாராக வேண்டும் என்று சொல்லியிருக்கிறீர்கள். கடந்த ஆண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. 405 பேருக்கு மருத்துவ படிப்பு கிடைத்தது. அதுபோன்று....

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்:- நீட் பிரச்சினை பற்றி பேசினார். நான் கேட்கிற ஒரு கேள்வி. தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விதி விலக்கு கிடைக்க வேண்டும் என்பதுதான் ஆளுங்கட்சியயாக இருக்கக்கூடிய தி.மு.க.வின் நிலைப்பாடு. அதேபோன்று எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய அ.தி.மு.க.வின் உணர்வும் அதுதான். தேர்தல் அறிக்கையில் கூறியிருக்கிறார்கள். பொதுக்குழுவில் தீர்மானம் போட்டிருக்கிறார்கள். சட்டசபையில் பேசியிருக்கிறோம். அமைச்சரவையை கூட்டி தீர்மானம் போட்டிருக்கிறோம். தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விதி விலக்கு கேட்கும் போது, நீங்கள் குரல் கொடுக்க தயாரா என்பது தான் எனது கேள்வி?.

நயினார் நாகேந்திரன் (பா.ஜ.க.): சட்டத்திற்குட்பட்டு நடக்குமானால் நிச்சயமாக நாங்கள் குரல் கொடுப்போம்.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தடுப்பூசிகளை மாநிலங்களுக்கு வழங்குவதில் காலதாமதம் ஏன்? நாடாளுமன்றத்தில் தயாநிதி மாறன் கேள்வி
கொரோனா தடுப்பூசிகளை மாநிலங்களுக்கு முறையாக வழங்குவதில் தொடர் காலதாமதம் ஏன் என்று நாடாளுமன்றத்தில் தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி எழுப்பினார்.
2. வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைப்பதற்கு உரிய நடவடிக்கை அதிகாரிகளுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை என்ற புதிய துறையை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
3. வணிகவரி, பதிவுத்துறையில் பொதுமக்களின் புகார்களுக்கு தாமதமின்றி தீர்வு காண வேண்டும் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
வணிகவரி மற்றும் பதிவுத்துறையில் பொதுமக்களின் புகார்களுக்கு தாமதமின்றி தீர்வு காண வேண்டும் என்று அரசு அதிகாரிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
4. செங்கல்பட்டில் 13 பேர் உயிரிழப்பு: தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை என்பதா? தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கேள்வி
ஆக்சிஜன் பற்றாக்குறையால் செங்கல்பட்டில் 13 பேர் இறந்த நிலையில் தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை என்பதா? என தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பி உள்ளார்.
5. நீரேற்று புனல்மின் திட்டங்களில் நடைமுறைக்கு உகந்த திட்டங்களை கண்டறிந்து செயல்படுத்த வேண்டும்
நீரேற்று புனல்மின் திட்டங்களில் நடைமுறைக்கு உகந்த திட்டங்களை கண்டறிந்து செயல்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.