பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோல் நீட்டிப்பு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அற்புதம்மாள் நன்றி..!


பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோல் நீட்டிப்பு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அற்புதம்மாள் நன்றி..!
x
தினத்தந்தி 28 Jun 2021 3:56 PM GMT (Updated: 28 Jun 2021 3:56 PM GMT)

பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோல் நீட்டிக்கப்பட்டதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அற்புதம்மாள் நன்றி தெரிவித்துள்ளார்.

சென்னை,

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை பெற்று வரும் பேரறிவாளன் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் பாதிக்கப்பட்டு வந்தார். இதையடுத்து அவருக்கு 30 நாள்கள் பரோல் வழங்க வேண்டும் என்று அவரது தாயார் அற்புதம்மாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்திருந்தார்.

இதையடுத்து பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது. கடந்த மே 28 ஆம் தேதி சென்னை புழல் சிறையில் இருந்து பரோல் விடுப்புக்காக விடுவிக்கப்பட்டார். இதனிடையே கடந்த 19 ஆம் தேதி, பேரறிவாளனுக்கு சிகிச்சை நடைபெற்று வருகிறது. 

சிகிச்சை தொடா்ச்சியாக அளித்தால் தான் நன்மை என டாக்டா்கள் கூறுவதால் மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு செய்ய வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் முதல்-அமைச்சருக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த கோரிக்கையை ஏற்று பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோலை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டிருந்த நிலையில் மேலும் ஒரு மாதத்திற்கு பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோல் நீட்டிக்கப்பட்டதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அற்புதம்மாள் நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தாயார் அற்புதம்மாள் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

30 ஆண்டுகளின் தனிமை சிறைவாசம் தந்துவிட்ட மன அழுத்தம், அதனால் ஏற்பட்ட உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக தொற்று, முடக்குவாதம், வயிற்று கோளாறு என தொடர் மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நிலையில் கொரோனா தொற்று காலத்தில் சிறையில் இருப்பது பேராபத்து என சிறை அரசு மருத்துவர் அளித்த ஆலோசனை ஏற்று வீட்டிலிருந்தபடி தொடர் மருத்துவம் பெற விடுப்பு வழங்கப்பட்டு தற்போதுதான் மருத்துவம் தொடங்கி உள்ள சூழலில் அது தடைபடாமல் தொடர்ந்திடும் வகையில் அறிவுக்கு விடுப்பு நீட்டிப்பினை கனிவுடன் வழங்கிய மாண்புமிகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். 

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Next Story