சிவசங்கர் பாபாவுக்கு 3 நாள் போலீஸ் காவல்


சிவசங்கர் பாபாவுக்கு 3 நாள் போலீஸ் காவல்
x
தினத்தந்தி 28 Jun 2021 9:25 PM GMT (Updated: 28 Jun 2021 9:25 PM GMT)

பாலியல் புகாரில் சிக்கி கைதான சிவசங்கர் பாபாவை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு செங்கல்பட்டு கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

சிவசங்கர் பாபா
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி என்ற இன்டர்நேஷனல் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா என்பவர் இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வந்த புகாரின் பேரில், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு செங்கல்பட்டு மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிவசங்கர் பாபாவை காவலில் எடுத்து விசாரிக்க கடந்த 18-ந்தேதி சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனு அளித்தனர். அப்போது உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர், குணமடைந்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

3 நாட்கள் போலீஸ் காவல்
இதனையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் அளித்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. இதில் சிவசங்கர் பாபாவை சி.பி.சி.ஐ.டி. போலீசார் செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் நீதிபதி தமிழரசி முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
மேலும் அவரை விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு குணவர்மன் அனுமதி கோரியிருந்த நிலையில், அவரை 30-ந்தேதி வரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதைத்தொடர்ந்து அவரை போலீசார் எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

Next Story