‘நீட்' தேர்வு விவகாரத்தில் காங்கிரஸ் மீது பழி போடுவதா? அ.தி.மு.க.வுக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்


‘நீட் தேர்வு விவகாரத்தில் காங்கிரஸ் மீது பழி போடுவதா? அ.தி.மு.க.வுக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்
x
தினத்தந்தி 28 Jun 2021 11:54 PM GMT (Updated: 28 Jun 2021 11:54 PM GMT)

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக எதிர்க்கட்சி தலைவராக உள்ள எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், ‘ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில்தான் ‘நீட்' தேர்வு திணிக்கப்பட்டது' என்று கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டுக்கு பலமுறை காங்கிரஸ் கட்சி சார்பில் விளக்கமாக பதில் கூறப்பட்டுள்ளது. ஆனால் திரும்பத்திரும்பப் பிரச்சினையை திசை திருப்புவதற்காக காங்கிரஸ் கட்சி மீது பழிபோட அ.தி.மு.க. முயல்கிறது. ‘நீட்' தேர்வு குறித்து இத்தகைய கேள்வியை எழுப்புவதற்கு அ.தி.மு.க.வினருக்கு எந்தவிதமான தகுதியும் இல்லை. தமிழகத்தில் ‘நீட்' தேர்வைத் திணித்தது பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும்தான் என்பதற்கு நிறைய ஆதாரங்களை கூற முடியும். தமிழகத்தில் உள்ள ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட கிராமப்புற மாணவர்களுக்கு அ.தி.மு.க. அரசு செய்த துரோகத்தை எடப்பாடி பழனிசாமி ஆயிரம் அறிக்கைகள் விட்டாலும் மூடிமறைக்க முடியாது. எனவே, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி மத்தியில் 2014-ல் இருந்த வரை தமிழ்நாட்டில் ‘நீட்' தேர்வு திணிக்கப்பட வில்லை. மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்த பிறகு தமிழகத்தில் 2017-ல் எடப்பாடி ஆட்சியில்தான் ‘நீட்' தேர்வு முதல் முறையாக திணிக்கப்பட்டது என்பதை எவராலும் மறுக்கவும் முடியாது, மறைக்கவும் முடியாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story