நீண்டகாலம் கோவில் நிலங்களில் குடியிருப்பவர்களை வாடகைதாரர்களாக மாற்றுவது குறித்து பரிசீலிக்கப்படும்


நீண்டகாலம் கோவில் நிலங்களில் குடியிருப்பவர்களை வாடகைதாரர்களாக மாற்றுவது குறித்து பரிசீலிக்கப்படும்
x
தினத்தந்தி 1 July 2021 4:50 AM GMT (Updated: 1 July 2021 4:50 AM GMT)

நீண்டகாலம் கோவில் நிலங்களில் குடியிருப்பவர்களை வாடகைதாரர்களாக மாற்றுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு சென்னையில் கூறினார்.

சென்னை,

சென்னை வடபழனியில் உள்ள ஆதிமூலப்பெருமாள் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள், திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்துதல் மற்றும் கோவில் முன்புறம் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவது குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் பேட்டி அளித்த சேகர்பாபு கூறியதாவது:-

200 ஆண்டுகள் பழமையான வடபழனி ஆதிமூலப்பெருமாள் கோவிலில் கடந்த 1960-ம் ஆண்டுக்கு பிறகு திருப்பணி நடைபெறவில்லை. தற்போது, பழமையான கோவில்களில் திருப்பணி, தேர் திருப்பணி, தெப்பக்குளங்கள் சீரமைப்பு பணிகள் நடக்க இருக்கின்றன. அதன்படி இக்கோவிலிலும் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்த முதல்-அமைச்சர் உத்தவிட்டுள்ளார்.

இந்த கோவிலில் பணியாற்றும் அர்ச்சகர்கள் உள்பட 6 பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இக்கோவிலின் முன்புறம் உள்ள 11 கடைகளையும் அகற்றி கோவில் முகப்பு தெரிய செய்யப்படும். அதேபோல் வியாபாரிகளை பாதிக்காத வகையில் அவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்படும். இப்பணிகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் நடைபெறும்.

ஜமீன் பல்லாவரம் பகுதியில் அகத்தீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான 2.02 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. அதை ஆக்கிரமிப்பு செய்தவர்கள், அதற்கு மின்சாரம் வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதுபோல் பல்வேறு கோவில்களுக்குச் சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.

கோவில் நிலங்களுக்கு 2015-ம் ஆண்டு திருத்தங்களின்படி வாடகை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஆனால், தற்போதுள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்ப, மக்களையும், கோவில் வருமானத்தையும் பாதிக்காத வகையில் நியாய வாடகை நிர்ணயம் செய்யப்படும்.

ஆக்கிரமிப்பு வெளியேற்றும் சட்டம் வாயிலாக யாருக்கும் பட்டா வழங்கபடமாட்டாது. நீண்டகாலம் குழுவாக ஒரே பகுதியில் கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் குடியிருப்பவர்களை வாடகைதாரர்களாக மாற்றுவதற்கு பரிசீலிக்கப்படும். கோவில் சொத்துகளை யார் ஆக்கிரமிப்பு செய்தாலும், பாரபட்சமின்றி அவர்கள் மீதும், அதில் தொடர்புடைய அலுவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர், வடபழனி முருகன் கோவிலின் உபகோவிலான புலியூர் பரத்வாஜேஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் உள்ள சூளைமேடு அஞ்சுகம் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் நடைபெறும் பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.

அப்போது இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன், எம்.எல்.ஏ.க்கள் கருணாநிதி, த.வேலு, பரந்தாமன் மற்றும் இணை கமிஷனர் ஹரிப்ரியா உள்ளிட்ட அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story