தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் அனுமதிக்கப்படுமா? மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை


தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் அனுமதிக்கப்படுமா? மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை
x
தினத்தந்தி 2 July 2021 2:00 AM GMT (Updated: 2 July 2021 2:00 AM GMT)

தமிழகத்தில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பதோடு, தளர்வுகளை கூடுதலாக அனுமதிப்பது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

சென்னை, 

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் 5-ந்தேதிவரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதில், 3 வகையான மாவட்டங்களாக பிரித்து வெவ்வேறு வகையான தளர்வுகளை அறிவித்துள்ளார். முதல் வகையில் கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களும், 2-ம் வகையில் அரியலூர், கடலூர், தர்மபுரி உள்ளிட்ட 23 மாவட்டங்களும், 3-ம் வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களும் வருகின்றன.

இந்த நிலையில், 5-ந்தேதி ஊரடங்கு உத்தரவு முடியும் நிலையில், அதை மேலும் நீட்டிப்பதற்கான ஆலோசனை கூட்டத்தை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நடத்துகிறார். காலை 11 மணியளவில் நடக்க இருக்கும் இந்த கூட்டத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

பொது போக்குவரத்து இயங்கி வரும் நிலையில் தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்கிறதா? மேலும் தளர்வுகளை அறிவிக்கலாமா? என்பது பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து நாளை அல்லது 4-ந்தேதியில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் தளர்வுகள் பற்றிய அறிவிப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார்.

Next Story