கடலூர் அருகே சட்டவிரோதமாக குடியேறிய வங்காளதேசத்தை சேர்ந்த 6 பேர் சிக்கினர்; போலீஸ் விசாரணை


கடலூர் அருகே சட்டவிரோதமாக குடியேறிய வங்காளதேசத்தை சேர்ந்த 6 பேர் சிக்கினர்; போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 2 July 2021 9:15 PM GMT (Updated: 2 July 2021 9:15 PM GMT)

கடலூர் அருகே சட்டவிரோதமாக குடியேறிய வங்காளதேசத்தை சேர்ந்த குடும்பத்தினர் 6 பேர் சிக்கினர். அவர்களுக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருக்கிறதா என்று விசாரணை நடந்து வருகிறது.

சந்தேகத்தை ஏற்படுத்திய போன் அழைப்பு
கடலூர் அடுத்த பெரிய கங்கணாங்குப்பம் பகுதியில் இருந்து வங்காள தேச நாட்டுக்கு அதிகளவில் போன் அழைப்புகள் சென்றுள்ளன. இதை கண்காணித்த மத்திய புலனாய்வு பிரிவு போலீசார், நேற்று மதியம் பெரியகங்கணாங்குப்பத்தில் கற்பக விநாயகர் நகரில் வந்து விசாரித்தனர். அங்கு சந்தேகத்துக்கு இடமாக யாரேனும் வசிக்கிறார்களா என்று விசாரணை மேற்கொண்டனர். அதில், ஒரு வீட்டில் ஒரு குடும்பத்தினர் வசிப்பதாக அந்த பகுதியினர் தெரிவித்தனர். அதன்படி மத்திய புலனாய்வு பிரிவு போலீசார், குறிப்பிட்ட வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து, விசாரணை மேற்கொண்டனர்.

6 பேர் சிக்கினர்
இதில் அங்கு 3 ஆண்கள், 2 பெண்கள் மற்றும் 3 வயது சிறுவன் உள்பட 6 பேர் வசித்து வந்ததும், அவர்கள் அனைவரும் வங்காளதேச நாட்டை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. மேலும் விசாரணையில், நாஜ்மூர் ஷித்தர் (வயது 35), அவரது மனைவி பரீதாபீவி(25), மகன் தக்பீர்(3) மற்றும் ஷக்தர் முல்லா(50), பாபுஷேக்(22) பாத்திமா பீவி(25) என்பதும், அவர்கள் முறையான ஆவணங்கள் இல்லாமல் அங்கு குடியேறியதும் தெரியவந்தது. சுமார் 2 மணி நேரமாக அங்கு விசாரணை நடத்திய மத்திய புலனாய்வு பிரிவு போலீசார், பின்னர் அவர்களை ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். வங்காளதேசத்தில் இருந்து இவர்கள் இந்தியாவுக்குள் ஊடுருவியது எப்படி, ரெட்டிச்சாவடி பகுதிக்கு இவர்களை அழைத்து வந்தவர்கள் யார்?, அங்கு குடியேறியதற்கான காரணம் என்ன?, இவர்களை போன்று வேறு யாரேனும் கடலூர் மாவட்டத்தில் குடியேறி இருக்கிறார்களா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

பயங்கரவாதிகளுடன் தொடர்பா?
அதே வேளையில், இங்கு வசித்து வந்தவர்களுக்கு பயங்கரவாதிகளுடன் ஏதேனும் தொடர்புகள் இருக்கிறதா என்று கியூ பிரிவு போலீசார் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story