3 மாதத்தில் விசாரணையை முடிக்க நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்துக்கு ஏன் உத்தரவிடக்கூடாது? ஐகோர்ட்டு கேள்வி


3 மாதத்தில் விசாரணையை முடிக்க நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்துக்கு ஏன் உத்தரவிடக்கூடாது? ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 2 July 2021 10:59 PM GMT (Updated: 2 July 2021 10:59 PM GMT)

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதையடுத்து, அதுகுறித்து விசாரிக்க சென்னை ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை கடந்த 2017-ம் ஆண்டு அரசு அமைத்தது.

இந்த ஆணையம் அனைத்து தரப்புகளிடமும் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. இந்த ஆணையத்தின் பதவிக்காலம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் தொண்டன் சுப்பிரமணியன் என்பவர் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ‘விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. விசாரணையும் முடியவில்லை. எனவே, விசாரணையை விரைவாக முடித்து, ஆணையத்தைக் கலைக்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது, அப்போது நீதிபதிகள், ‘விசாரணையை 3 மாதங்களில் முடித்து, இறுதி அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு ஏன் உத்தரவிடக் கூடாது?’ என்று கேள்வி எழுப்பினர். பின்னர், 
இதுதொடர்பாக தமிழக அரசு 6 வாரங்களில் பதில் அளிக்க உத்தரவிட்டனர்.

Next Story