ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழு தொடர்பான வழக்கில் தமிழக அரசு பதில் மனு


ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழு தொடர்பான வழக்கில் தமிழக அரசு பதில் மனு
x
தினத்தந்தி 3 July 2021 9:17 AM GMT (Updated: 3 July 2021 9:17 AM GMT)

ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழு தொடர்பான வழக்கில் தமிழக அரசு ஐகோர்ட்டில் பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் நீட் தேர்வு தொடர்பான தாக்கம் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் தமிழக அரசு சார்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழுவிடம் பொதுமக்கள் நீட் தேர்வு குறித்த கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக அரசு அமைத்துள்ள குழுவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக பா.ஜ.க. பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், மருத்துவக் கல்வியை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளை மருத்துவ ஆணையத்திடமும், ஆலோசனை குழுமத்திடமும் மட்டுமே தெரிவிக்க வேண்டும் என்றும் அதனை மீறும் வகையில் தமிழக அரசு குழு அமைத்துள்ள அனுமதிக்கத்தக்கது அல்ல என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்த வழக்கு ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், தேர்தல் அறிக்கையில் அறிவித்த வாக்குறுதியின் அடிப்படையில் கொள்கை முடிவு எடுக்கப்பட்டு இந்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு முரணான நிலைபாட்டை எடுக்க முடியாது என தமிழக அரசுக்கு அறிவுறுத்தினர். மேலும் நீட் தேர்வு பாதிப்புகளை கண்டறியும் குழு அமைக்க உச்ச நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டதா? என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டனர்.

இதற்கான பதில் மனுவை, தமிழ்நாடு அரசின் மருத்துவ மற்றும் குடும்பநலத் துறையின் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணனின் இன்று ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது;-

“நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய உண்மை கண்டறியும் குழுவை நியமித்ததன் மூலம் மனுதாரரின் அடிப்படை உரிமைகள், சட்ட உரிமைகள் எப்படி பாதிக்கப்பட்டுள்ளது என்பதை மனுவில் தெரிவிக்கவில்லை. குழுவின் அறிக்கை, அரசின் நடவடிக்கைகள் குறித்து யூகத்தின் அடிப்படையில் மட்டுமே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவிற்கு இதுவரை 84,343 மனுக்கள் வரப்பெற்றுள்ளது. நீட் பாதிப்பு குறித்து பெற்றோரும், மாணவர்களும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். மனுதாரர் ஒரு மாணவரோ, பெற்றோரோ இல்லை. அரசியல் கட்சியை சேர்ந்த அவர், இந்த விவகாரத்தில் பொது நலன் எப்படி பாதிக்கப்பட்டது என்பதை தெரிவிக்கவில்லை.  

நீதிபதி ஏ.கே.ராஜன் குழு நியமனத்தில் அரசியல் சாசனத்தின் எந்த அடிப்படை உரிமையும் மீறப்படவில்லை. மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டே குழு நியமிக்கப்பட்டு உள்ளது. குழுவின் அறிக்கையை ஆராய்ந்த பிறகுதான் அரசு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கும். கிராமப்புற மற்றும் சமூக பொருளாதார ரீதியில் பின் தங்கிய மாணவர்கள் எழுப்பியுள்ள பிரச்சினை குறித்து ஆய்வு செய்ய குழு நியமித்ததை எதிர்த்து தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு ஜனநாயத்தை ஒடுக்கும் முயற்சி ஆகும்.

நீட் தேர்வு அரசு பள்ளி மற்றும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பதை ஆராய்வதற்கு மட்டுமே இந்தப்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதை சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு உத்தரவுகளுக்கு எதிரானது என கூற முடியாது.”

இவ்வாறு தமிழக அரசின் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குழு இன்னும் அரசுக்கு அறிக்கை அளிக்காத நிலையில், மனுதாரர் கரு. நாகராஜன் தொடர்ந்துள்ள வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும் விளம்பர நோக்கத்திற்காக தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த வழக்கு வரும் திங்கள்கிழமை தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story