மதுரையில் குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது


மதுரையில் குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது
x
தினத்தந்தி 3 July 2021 1:25 PM GMT (Updated: 3 July 2021 5:24 PM GMT)

இதயம் அறக்கட்டளை நிறுவனரான சிவக்குமார், மதர்ஷா ஆகிய இருவரும் தலைமறைவாக இருந்த நிலையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை, 

மதுரை ரிசர்வ்லைன் போலீசார் குடியிருப்பில் இதயம் அறக்கட்டளை சார்பில் முதியோர் இல்லம், ஆதரவற்றோர் மற்றும் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வந்தது. இங்கு 38 ஆண்கள், 35 பெண்கள் மற்றும் 11 குழந்தைகள் என 84 பேர் தங்கியிருந்தனர். 

இந்த காப்பகத்தில் ஆதரவற்ற நிலையில் தங்கி இருந்த ஐஸ்வர்யா (வயது 22) என்பவரின் ஒரு வயது குழந்தை மாணிக்கம் மற்றும் ஸ்ரீதேவி என்ற பெண்ணின் 2 வயது குழந்தை தனம் என 2 குழந்தைகள் திடீரென மாயமாகின. 
இதில் ஆண் குழந்தை மாணிக்கம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்ததாகவும், அதன் உடலை மதுரை தத்தனேரி மயானத்தில் புதைத்ததாகவும் காப்பக நிர்வாகிகள் போலியான ஆவணங்களை தயார் செய்துள்ளனர்.

குழந்தையின் தாய் ஐஸ்வர்யாவை நம்ப வைக்க அவரையே மயானத்துக்கு அழைத்துச் சென்று இறுதிச்சடங்குகளை செய்ய வைத்துள்ளனர். இது சம்பந்தமான புகைப்படங்கள், ஆவணங்கள் சமூக ஆர்வலரான அசாருதீன் என்பவருக்கு கிடைத்து, அவர் போலீசில் புகார் அளித்த பின்னர்தான் திடுக்கிடும் தகவல்கள் வெளிவர ஆரம்பித்தன.

மாயமான 2 குழந்தைகளும் விற்கப்பட்டது தெரியவந்தது. எனவே இது தொடர்பாக மதுரை கலெக்டர் அனீஷ்சேகர் உத்தரவின் பேரில் போலீசார், குழந்தைகள் நலக்குழு அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு அந்த 2 குழந்தைகளையும் மீட்டனர். பின்னர் காப்பகம் மூடப்பட்டு, அதில் வசித்தவர்கள் வேறு காப்பகங்களுக்கு மாற்றப்பட்டனர். இதை அறிந்ததும் காப்பகத்தின் முக்கிய நிர்வாகியான சிவக்குமார் தலைமறைவாகிவிட்டார். வேறு சிலர் பிடிபட்டனர்.

அதை தொடர்ந்து போலி ஆவணங்கள் தயாரித்து சட்டத்திற்கு விரோதமாக குழந்தைகளை விற்றதாக காப்பக ஒருங்கிணைப்பாளர் கலைவாணி (32), குழந்தைகளை வாங்கிய கண்ணன் (50), பவானி (45), சகுபர்சாதிக் (38), அனிஸ்ராணி (35), இதற்கு உடந்தையாகவும், புரோக்கர்களாகவும் செயல்பட்ட ராஜா (38), செல்வி (42) ஆகிய 7 பேரை  போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் அனைவருக்கும் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். மேலும் தலைமறைவான காப்பக நிறுவனர் சிவக்குமார், அவருடைய உதவியாளர் மதர்ஷா ஆகியோரை போலீசார் தேடி வந்தனர். 

இந்நிலையில் மதுரை இதயம் அறக்கட்டளை காப்பகத்தின் நிர்வாகி சிவகுமார் மற்றும் ஊழியர் மதர் ஷா ஆகியோரை தனிப்படை காவல் துறையினர் தமிழக - கேரள எல்லையில் கைது செய்துள்ளனர். 

சென்னை, புதுக்கோட்டை மற்றும் தமிழக பிற மாநில எல்லைப்பகுதியில் தனிப்படை காவல் துறையினர் முகாமிட்டு குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், தமிழக - கேரள எல்லையில் இந்த இருவரையும் கைது செய்துள்ளனர். கைதான இருவரும் இன்று தல்லாகுளம் காவல்நிலையம் அழைத்து வரப்பட உள்ளனர்.

Next Story