பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாஜ்பாய், மாட்டு வண்டியில் சென்ற வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் பரவுகிறது


பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாஜ்பாய், மாட்டு வண்டியில் சென்ற வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் பரவுகிறது
x
தினத்தந்தி 3 July 2021 10:54 PM GMT (Updated: 3 July 2021 10:54 PM GMT)

பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நாடாளுமன்றத்துக்கு மாட்டு வண்டியில் சென்ற வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

சென்னை,

தமிழகத்தில் பெட்ரோல் விலை சதத்தையும் தாண்டி, ஏறுமுகத்தில் சென்றுக்கொண்டே இருக்கிறது. பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, சங்கிலி தொடர் போல பல பொருட்களில் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்தவகையில், தற்போதைய விலை உயர்வு காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு சிவப்பு கம்பளத்தை விரிப்பதாக உள்ளது. வரலாறு காணாத விலையை எட்டியிருப்பதால், வாகன ஓட்டிகள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

எரிபொருள் விலை உயர்வு அடைந்திருப்பதால் தங்களுடைய வாகனங்களை சிலர் வீட்டிலேயே நிறுத்திவிட்டு, ஒதுக்கி வைத்திருந்த சைக்கிள்களை மீண்டும் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். இதனால் முன்பை விடவும் சாலைகளில் சைக்கிள்கள் ஆக்கிரமித்தப்படி செல்வதை காணமுடிகிறது. கடைகளுக்கு பொருட்கள் வாங்கச்சென்றாலும் வாகனங்களை தவிர்த்துவிட்டு, நடந்து அல்லது சைக்கிள்களில் செல்லும் நடைமுறையை தற்போது சிலர் தங்களுடைய வாடிக்கையாக்கிக் கொண்டு வருகிறார்கள்.

விமர்சனங்களை எதிர்கொள்ளும் அரசுகள்

தமிழகம் முழுவதும் பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வாகன ஓட்டிகள் உள்பட பொதுமக்கள் விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார்கள். பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு மத்திய-மாநில அரசுகள் ஒருவரையொருவர் காரணம் என்று குற்றம்சாட்டி வருகின்றன. இதனால் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க.வும், மாநிலத்தில் ஆட்சி பொறுப்பில் உள்ள தி.மு.க.வும் மக்களிடம் இருந்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றன.

வைரலாகும் வாஜ்பாய் வீடியோ

இந்தநிலையில், பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நடத்திய மாட்டு வண்டி போராட்டம் தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. பா.ஜ.க.வை சேர்ந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 48 ஆண்டுகளுக்கு முன்பு, பெட்ரோல் விலை உயர்த்தப்பட்ட விவகாரத்தில் அப்போதைய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரதமர் இந்திராகாந்தியின் அரசை கடுமையாக எதிர்த்தார். பெட்ரோல் மற்றும் மண்எண்ணெய் விலை உயர்த்தப்பட்டதற்கு எதிராக 1973-ம் ஆண்டு நவம்பர் மாதம் வாஜ்பாய் போராட்டம் நடத்தினார். பெட்ரோல் விலை லிட்டருக்கு 7 பைசா உயர்த்தப்பட்டதற்காக, நாடாளுமன்றத்துக்கு அவர், 2 மாடுகள் பூட்டப்பட்ட மாட்டு வண்டியில் வந்து எதிர்ப்பை பதிவு செய்தார். 1 நிமிடம் 20 வினாடிகள் ஓடும் இந்த பழமையான வீடியோ ‘வாட்ஸ் அப்', ‘பேஸ்புக்', ‘யூ-டியூப்', ‘இன்ஸ்டாகிராம்' ‘டுவிட்டர்’ உள்பட பல்வேறு சமூக ஊடகங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Next Story