கடந்த அ.தி.மு.க. அரசின் அலட்சிய போக்கால் தென்பெண்ணை ஆற்றின் உரிமை பறிபோகிறது வைகோ அறிக்கை


கடந்த அ.தி.மு.க. அரசின் அலட்சிய போக்கால் தென்பெண்ணை ஆற்றின் உரிமை பறிபோகிறது வைகோ அறிக்கை
x
தினத்தந்தி 4 July 2021 12:05 AM GMT (Updated: 4 July 2021 12:05 AM GMT)

கடந்த அ.தி.மு.க. அரசின் அலட்சிய போக்கால் தென்பெண்ணை ஆற்றின் உரிமை பறிபோகிறது வைகோ அறிக்கை.

சென்னை,

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தென்பெண்ணை ஆற்றின் மார்கண்டேய நதியில் அமைக்கப்பட்டுள்ள கர்நாடக அரசின் தடுப்பு அணையால் தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் பயிர் சாகுபடிக்கு நீர்ப்பாசனமும், குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்படும் நிலைமை உருவாகி விட்டது. கடந்த அ.தி.மு.க. அரசின் அலட்சியப் போக்கால் தென்பெண்ணை ஆற்றிலும் காவிரியைப் போல உரிமையை தமிழ்நாடு பறிகொடுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தென்பெண்ணை ஆற்று நீர் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படவில்லை என்பதால், ஒரு தீர்ப்பாயம் அமைப்பது குறித்து மத்திய அரசு முடிவெடுக்கலாம் என்று பேச்சுவார்த்தைக் குழு பரிந்துரை செய்தது. ஆனால் ஓராண்டு காலம் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இதில் முடிவெடுக்காமல் தமிழ்நாட்டிற்கு பச்சை துரோகம் இழைத்திருப்பது கண்டனத்திற்கு உரியது. எனவே தமிழக அரசு உடனடியாக செயல்பட்டு, மார்கண்டேய நதியில் கட்டப்பட்டுள்ள அணைக்கு தென்பெண்ணை ஆற்றின் நீர் செல்ல விடாமல் தடுத்து, தமிழ்நாட்டின் உரிமையை நிலைநிறுத்த வலியுறுத்துகின்றேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story