தென்பெண்ணை துணைநதியில் அணை: கர்நாடக அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மத்திய அரசுக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்


தென்பெண்ணை துணைநதியில் அணை: கர்நாடக அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மத்திய அரசுக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 4 July 2021 12:09 AM GMT (Updated: 4 July 2021 12:09 AM GMT)

தென்பெண்ணை துணைநதியில் அணை கட்டியிருக்கும் கர்நாடக அரசு மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு பாசன ஆதாரமாக விளங்கும் தென்பெண்ணை ஆற்றின் துணைநதியான மார்க்கண்டேய ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மிகப்பெரிய அளவில் புதிய அணை கட்டி இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தென்பெண்ணை ஆற்றுச் சிக்கல் தொடர்பான வழக்கு தீர்ப்பாயத்தில் விசாரணையில் இருக்கும்போது கர்நாடகா தன்னிச்சையாக அணை கட்டியிருப்பது கண்டிக்கத்தக்கது.

காவிரி ஆற்று நீர் பிரச்சினையில் கர்நாடக அரசு எவ்வாறு அனைத்து விதிகளையும், ஒப்பந்தங்களையும், அறத்தையும் காலில் போட்டு மிதித்துவிட்டு சுயநலத்துடன் நடந்துகொண்டதோ, அதேபோல்தான் தென்பெண்ணை ஆற்றின் துணைநதியான மார்க்கண்டேய நதியின் குறுக்கே புதிய அணை கட்டுவதிலும் நடந்துகொண்டுள்ளது.

குடிநீருக்கு தட்டுப்பாடு

தென்பெண்ணையாறு கர்நாடகத்தில் தோன்றினாலும் அம்மாநிலத்தில் மிகக்குறைந்த தொலைவுக்கு மட்டுமே ஓடுகிறது. தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடங்கி பல்வேறு மாவட்டங்கள் வழியாக ஓடி கடலூர் மாவட்டத்தில் வங்க கடலில் கலக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தென்பெண்ணையின் நீராதாரமாக திகழ்வது மார்க்கண்டேய நதிதான். இப்போது அந்த ஆற்றில் அணை கட்டப்பட்டுவிட்டது. அதில் 165 அடி உயரத்துக்கு தண்ணீரை தேக்க முடியும். அங்கு 2 டி.எம்.சி. வரை நீரைத் தேக்கலாம் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.

165 அடி உயர அணை நிரம்பினால்தான் மார்க்கண்டேய ஆற்றிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் வந்து தென்பெண்ணையாற்றில் கலக்கும். இப்போது அதற்கு வாய்ப்பில்லை என்பதால் தமிழ்நாட்டில், தென்பெண்ணை ஆற்றை பாசன ஆதாரமாக நம்பியுள்ள கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்படும். இம்மாவட்டங்களில் குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும். இதனால் லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழப்பார்கள்.

நடவடிக்கை எடுக்கவேண்டும்

1892-ம் ஆண்டில் மெட்ராஸ்-மைசூர் மாகாணங்களுக்கு இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்கீழ் இந்த ஆறும் வருகிறது. அந்த ஒப்பந்தத்தின்படி, முதல்மடை பாசனப் பகுதிகளில் எதைச் செய்வதானாலும், கடைமடைப் பாசன மாநிலமான தமிழகத்தின் ஒப்புதலை கர்நாடகம் பெற வேண்டும். ஆனால் அதை மதிக்காமல் கர்நாடகா தன்னிச்சையாக அணை கட்டியிருப்பது நடுவர் மன்றத்தை அவமதிக்கும் செயல். இது இரு மாநிலங்களுக்கு இடையிலான நல்லுறவைப் பாதிக்கும். இந்த விவகாரத்தை தமிழக அரசு உடனடியாக மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று கர்நாடக அரசு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும். நடுவர் மன்றத்திலும் இந்த சிக்கலை எழுப்பி, சட்டவிரோதமாக, அனுமதியின்றி கட்டப்பட்ட அணையை அகற்ற ஆணையிடும்படி வலியுறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story