தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானப்பணிகளில் ‘எம் சாண்ட்’ அமைச்சர் எ.வ.வேலு தகவல்


தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானப்பணிகளில் ‘எம் சாண்ட்’ அமைச்சர் எ.வ.வேலு தகவல்
x
தினத்தந்தி 4 July 2021 1:22 AM GMT (Updated: 4 July 2021 1:22 AM GMT)

தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானப்பணிகளுக்கும் ‘எம் சாண்ட்’ பயன்படுத்தப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

சென்னை,

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

நெடுஞ்சாலைத்துறையின் ஒப்பந்ததாரர்கள் கூட்டத்தில் பல கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர்.

அதாவது, அரசின் ஆணையின்படி ஒப்பந்ததாரர்கள்தான் நெடுஞ்சாலைகளை பழுதுபார்க்கிறோம். ஆனால் உரிய நேரத்தில் அதற்கான பணம் கிடைப்பதில்லை. அரசு கூறுகிற மதிப்பீட்டில் பல பணிகளைச் செய்ய முடியவில்லை என்றெல்லாம் கூறினார்கள்.

துறை சார்ந்த தலைமைப் பொறியாளரை வைத்து சிறப்பு குழு அமைத்து இது சம்பந்தமாக முடிவெடுக்கப்படும் என்று கூறியிருந்தேன்.

‘எம் சாண்ட்’ பயன்பாடு

அந்த குழுவின் கூட்டத்தில், ஒப்பந்ததாரர்கள் வைத்திருந்த 22 கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டன. தற்போது ஆற்று மணல் கிடைப்பது அரிதாகிவிட்டதால், ‘எம் சாண்டை’ பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பரிசீலிக்கப்பட்டது.

அப்போது சம்பந்தப்பட்ட பொறியாளர், மணலைவிட ‘எம் சாண்டில்’ உறுதித்தன்மை அதிகமாக உள்ளது. பொதுப்பணித் துறையைப் போல நெடுஞ்சாலைத்துறையிலும் அதைப் பயன்படுத்தலாம் என்று பரிந்துரைத்தார்.

சென்னை சாலைப்பணிகள்

சென்னையில் பகலில் அதிக போக்குவரத்து இருப்பதால், இரவு நேரத்தில்தான் நெடுஞ்சாலைப்பணிகள் நடைபெறுகின்றன. இரவில் பணி நேரத்தை நீட்டித்துத் தரும்படி கோரியிருந்தனர். இதுதொடர்பாக துறையின் செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. மற்றும் உள்துறைக்கு கடிதம் எழுதி அனுமதி பெறலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளின்போது ஏற்கனவே உள்ள மின் கம்பங்களை அகற்றுவது, டெலிபோன் கம்பங்களை அப்புறப்படுத்துவது, குடிநீர் இணைப்புகளை நீக்குவது போன்ற பணிகளுக்கு கூடுதல் காலம் ஆவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறையின் செயலாளருக்கு கடிதம் எழுதி அவற்றை உடனடியாக செய்து முடிக்க ஏற்பாடு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அரசு கொடுக்கும் பணத்தில் உரிய நேரத்தில் தரமான சாலையை அமைக்க முடியவில்லை என்று ஒப்பந்ததாரர்கள் கூறியிருந்தனர். நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி, தரமான சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சிறு துறைமுகங்கள்

தமிழகம் உள்ளிட்ட 9 மாநிலங்களில் உள்ள சிறு துறைமுகங்களை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் திட்டம் பற்றி ஏற்கனவே மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். அதற்கு, மாநில அரசை கலந்துபேசாமல் திட்டத்தை நிறைவேற்றமாட்டோம் என்று மத்திய அரசு பதில் அளித்திருக்கிறது.

மாநகராட்சியில் புதிதாக சாலை போடும்போது அந்த இடம் மேடாகிவிடக்கூடாது என்பதற்காக ஏற்கனவே உள்ள சாலைகளை நீக்கிவிட்டு புதிய சாலைகளை போட வேண்டும் என்று கோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் அதை கட்டாயம் கடைப்பிடிப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story