சப்-இன்ஸ்பெக்டர்கள் மீது புகார்: வடபழனி உதவி கமிஷனர் அலுவலகத்தில் நடிகை ராதா விசாரணைக்கு ஆஜர்


சப்-இன்ஸ்பெக்டர்கள் மீது புகார்: வடபழனி உதவி கமிஷனர் அலுவலகத்தில் நடிகை ராதா விசாரணைக்கு ஆஜர்
x
தினத்தந்தி 4 July 2021 1:41 AM GMT (Updated: 4 July 2021 1:41 AM GMT)

சப்-இன்ஸ்பெக்டர்கள் மீது அளித்த புகார் மீதான விசாரணைக்காக வடபழனி போலீஸ் நிலையத்தில் நடிகை ராதா நேரில் ஆஜரானார்.

பூந்தமல்லி,

‘சுந்தரா டிராவல்ஸ்’ உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ராதா (வயது 38). சென்னை சாலிகிராமத்தில் வசித்து வரும் இவர், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வசந்தராஜா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக விருகம்பாக்கம் போலீசில் சில மாதங்களுக்கு முன்பு புகார் அளித்தார். பின்னர் இருவரும் சமரசமாக செல்வதாக புகாரை வாபஸ் பெற்றார்.

இந்தநிலையில் தனது கணவர் வசந்தராஜா தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும், அவருக்கு உடந்தையாக உள்ள சப்-இன்ஸ்பெக்டர்கள் பாரதி, இளம்பருதி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி நேற்று முன்தினம் பரங்கிமலையில் உள்ள இணை கமிஷனர் அலுவலகத்தில் நடிகை ராதா புகார் மனு ஒன்றை அளித்தார்.

விசாரணைக்கு ஆஜர்

இந்த புகார் மனு வடபழனி உதவி கமிஷனர் அலுவலகத்துக்கு மாற்றப்பட்டது. இந்த புகார் மனுவின் பேரில் நேற்று நடிகை ராதா விசாரணைக்காக வடபழனி போலீஸ் நிலையத்தில் உள்ள உதவி கமிஷனர் அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்.

நடிகை ராதாவிடம் வடபழனி உதவி கமிஷனர் தீவிர விசாரணை மேற்கொண்டார். விசாரணைக்கு பிறகு நடிகை ராதா அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

முன்னதாக நிருபர்களிடம் நடிகை ராதா கண்ணீர் மல்க கூறியதாவது:-

வேலைக்கு பாதிப்பு

சப்-இன்ஸ்பெக்டர் வசந்தராஜாவை நம்பி அவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தேன். ஆனால் இப்படி ஆகிவிட்டது. விருகம்பாக்கத்தில் அவர் மீது நான் கொடுத்த புகாரின் மீது என்னை விசாரணைக்கு காரில் அழைத்து சென்ற சப்-இன்ஸ்பெக்டர் பாரதி, அங்கு வசந்தராஜாவையும் வரவழைத்து இருவரும் சமரசமாக சேர்ந்து வாழும்படி வற்புறுத்தினார்.

வசந்தராஜா, என் மீது கொடுத்த புகார் பொய் என போலீசில் கூறும்படி கூறினார். உனது புகாரால் எனது சப்-இன்ஸ்பெக்டர் வேலைக்கு பாதிப்பு ஏற்பட்டால் உன்னை உயிருடன் விடமாட்டேன் என மிரட்டினார். பல போலீஸ் நிலையங்களில் இதுபோல் என் மீது வழக்கு உள்ளது. அதை பற்றி நான் கவலைப்படமாட்டேன். எனக்கு எனது வேலைதான் முக்கியம் என்று புகாரை திரும்ப பெற வற்புறுத்தினார். அவருக்கு சப்-இன்ஸ்பெக்டர்கள் உடந்தையாக உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story