மதுரையில் குழந்தைகள் விற்பனை: தலைமறைவாக இருந்த காப்பக நிறுவனர் கைது


மதுரையில் குழந்தைகள் விற்பனை: தலைமறைவாக இருந்த காப்பக நிறுவனர் கைது
x
தினத்தந்தி 4 July 2021 2:12 AM GMT (Updated: 4 July 2021 2:12 AM GMT)

மதுரையில் குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் தலைமறைவாக இருந்த காப்பக நிறுவனர் கைது செய்யப்பட்டார். கேரளாவுக்கு தப்பிச்செல்ல முயன்ற போது சிக்கினார்.

மதுரை,

மதுரை ரிசர்வ்லைன் போலீசார் குடியிருப்பில் இதயம் அறக்கட்டளை சார்பில் ஆதரவற்றோர் முதியோர், குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வந்தது. இந்த காப்பகத்தில் தங்கியிருந்த மேலூர் சேக்கிபட்டி கிராமத்தை சேர்ந்த ஐஸ்வர்யாவின் 3 வயது ஆண் குழந்தை, கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீதேவி என்ற பெண்ணின் 2 வயது குழந்தை காப்பக நிர்வாகிகளால் விற்கப்பட்டது.

இதில் ஐஸ்வர்யாவின் 3 வயது குழந்தை கொரோனாவுக்கு பலியானதாக போலிச்சான்றுகள் தயார் செய்யப்பட்டு விற்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தலைமறைவு

இந்த சம்பவம் குறித்து தல்லாகுளம் போலீசார் விசாரணை நடத்தி, குழந்தைகளை பணம் கொடுத்து வாங்கிய தம்பதியினர் மற்றும் காப்பக ஒருங்கிணைப்பாளர் கலைவாணி, இதில் புரோக்கர்களாக செயல்பட்ட ராஜா, செல்வி ஆகிய 7 பேரை கைது செய்தனர். மேலும் அந்த காப்பகம் மூடி சீல் வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் தலைமறைவாக இருந்த அந்த காப்பகத்தின் நிறுவனர் சிவக்குமார் மற்றும் உதவியாளர் மதர்ஷா ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

கைது

இந்த நிலையில் தேனி மாவட்டம் போடி அருகே தமிழக-கேரள எல்லை பகுதியில் வைத்து சிவக்குமார் மற்றும் மதர்ஷா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் கேரளாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற போது சிக்கியது தெரியவந்தது. பின்னர் அவர்களை தனிப்படை போலீசார் மதுரைக்கு அழைத்துச் சென்றனர்.

அவர்களிடம் நடத்தி விசாரணைக்கு பின்னர்தான், காப்பகத்தில் இருந்து இதுவரை எத்தனை குழந்தைகளை விற்பனை செய்யப்பட்டன, யார்-யார் அதற்கு உடந்தையாக இருந்தார்கள்? என்பது குறித்து தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

Next Story