த.மா.கா. சார்பில் காமராஜர் பிறந்த தின விழா கொரோனா விழிப்புணர்வு நாளாக கொண்டாடப்படும்


த.மா.கா. சார்பில் காமராஜர் பிறந்த தின விழா கொரோனா விழிப்புணர்வு நாளாக கொண்டாடப்படும்
x
தினத்தந்தி 4 July 2021 3:04 AM GMT (Updated: 4 July 2021 3:04 AM GMT)

த.மா.கா. சார்பில் காமராஜர் பிறந்த தின விழா கொரோனா விழிப்புணர்வு நாளாக கொண்டாடப்படும் ஜி.கே.வாசன் அறிவிப்பு.

சென்னை,

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள த.மா.கா. கட்சி அலுவலகத்தில் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா 2-வது அலையின் தாக்கம் உச்சத்தை தொட்டு, தற்போது மிகவும் குறைந்து உள்ளது. இருப்பினும் கொரோனாவின் தாக்கம் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இன்னும் இருந்து கொண்டிருக்கிறது. கொரோனாவால் இறப்பும் நீடிக்கிறது.

இந்த நிலையில், கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படும் காமராஜர் பிறந்த தின விழாவை இந்த ஆண்டு த.மா.கா. சார்பில் கொரோனா விழிப்புணர்வு நாளாக கொண்டாட இருக்கிறோம். குறிப்பாக தடுப்பூசி 100 சதவீதம் அவசியம் தேவை என்ற விழிப்புணர்வை நாடு முழுவதும் த.மா.கா.வினர் மக்களை சந்தித்து எடுத்து கூறுவார்கள். இதன் மூலம் கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலையை த.மா.கா. ஏற்படுத்தும்.

காமராஜர் பிறந்த நாளில், அவரது சிலை, உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதுடன், கபசுர குடிநீர், முககவசம் வழங்குதல், முடிந்த வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் செய்தல் போன்ற பணிகளை த.மா.கா. முழுமையான நிலையில் செய்ய இருக்கிறது.

காமராஜர் பிறந்தநாளை கொரோனா விழிப்புணர்வு நாளாக நடத்துவதற்காக, மாநில, மாவட்ட நிர்வாகிகளை சந்திப்பதற்காக, வருகிற திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை சுற்றுப்பயணம் செய்ய போகிறேன். தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story