மேகதாது அணை குறித்து பேச்சுவார்த்தை: கர்நாடக அரசின் அழைப்பை தமிழக அரசு ஏற்குமா? அமைச்சர் துரைமுருகன் பதில்


மேகதாது அணை குறித்து பேச்சுவார்த்தை: கர்நாடக அரசின் அழைப்பை தமிழக அரசு ஏற்குமா? அமைச்சர் துரைமுருகன் பதில்
x
தினத்தந்தி 4 July 2021 5:18 AM GMT (Updated: 4 July 2021 5:18 AM GMT)

மேகதாது அணை விவகாரம் குறித்து கர்நாடக அரசு விடுத்துள்ள பேச்சுவார்த்தைக்கான அழைப்பை தமிழக அரசு ஏற்குமா? என்பது குறித்து அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.

சென்னை,

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மார்கண்டேய நதியில் ஒரு அணை கட்டுவது பற்றியும், மேகதாது அணை குறித்தும் பேசுவதற்கு தயாராக இருக்கிறோம். எனவே கூடி பேசலாம் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா கடிதம் எழுதியிருக்கிறார்.

அந்த கடிதத்துக்கு உரிய பதிலை எடியூரப்பாவுக்கு, மு.க.ஸ்டாலின் எழுதுவார். அந்த கடிதத்தில் எங்களது கருத்துகளை அவர் ஆணித்தரமாக தெரிவிப்பார். அந்த கடிதம் எழுதப்பட்ட பிறகு உங்களுக்கு (பத்திரிகையாளர்களுக்கு) தரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மு.க.ஸ்டாலினின் கடிதத்தில்

இதனைத்தொடர்ந்து அமைச்சர் துரைமுருகனிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- இந்த விவாதத்துக்கு செல்ல தமிழக அரசு தயாராக இருக்கிறதா?

பதில்:- இதற்கான பதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதும் கடிதத்தில் இருக்கும்.

கேள்வி:- மேகதாது அணை விவகாரத்தில் தமிழகம்-கர்நாடகா இடையே மத்திய அரசு ஏதாவது சமரச முயற்சியில் ஈடுபட்டுள்ளதா?

பதில்:- யாருமே ஈடுபடவில்லை.

பதில் கடிதம்

கேள்வி:- பிரதமர் நரேந்திரமோடியை மு.க.ஸ்டாலின் சந்தித்து வந்தபிறகு, கர்நாடகாவில் இருந்து அழைப்பு வந்திருக்கிறதே...

பதில்:- கடிதம் எழுதுவது அவரது (எடியூரப்பா) இஷ்டம். இவரும் (மு.க.ஸ்டாலின்) பதில் கடிதம் எழுத உள்ளார்.

மேற்கண்டவாறு துரைமுருகன் பதில் அளித்தார்.

Next Story