அரசின் அடிப்படை கடமையை எதிர்த்து பா.ஜ.க. தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு


அரசின் அடிப்படை கடமையை எதிர்த்து பா.ஜ.க. தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு
x
தினத்தந்தி 4 July 2021 5:40 AM GMT (Updated: 4 July 2021 5:40 AM GMT)

அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் ஒரு அரசின் அடிப்படை கடமையையும், பணியையும் தடுக்கும்விதமாக பா.ஜ.க. பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் தொடர்ந்துள்ள வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

சென்னை,

‘நீட்’ தேர்வால் ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதை எதிர்த்து பா.ஜ.க. பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்குக்கு பதில் அளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு கடந்த வாரம் உத்தரவிட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு நாளை (திங்கட்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

இந்த வழக்கில் சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் பதில்மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கற்பனை

தமிழக அரசு அமைத்துள்ள இந்த ஆய்வுக் குழுவால், மனுதாரரின் உரிமை எந்த வகையில் பாதிக்கப்பட்டுள்ளது, இந்தக் குழுவை அமைத்துள்ளதால் இவருக்கும், பொதுமக்களுக்கும் சட்டப்படியான எந்த உரிமை மறுக்கப்பட்டது என்பதை மனுவில் தெரிவிக்கவில்லை. இந்தக் குழுவால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை. இக்குழுவின் அறிக்கை இப்படித்தான் வரும், அரசு இப்படித்தான் நடவடிக்கை எடுக்கும் என்ற கற்பனையில் இந்த வழக்கை மனுதாரர் தாக்கல் செய்துள்ளார். இதுதொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்த கருத்துகளை மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார். அதைத் தவிர, இந்தக் குழு அமைத்ததால், பொதுநல பாதிப்பு என்ன என்பதை மனுதாரர் தெளிவுபடுத்தவில்லை.

விளம்பர வழக்கு

‘நீட்’ தேர்வால் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை மட்டுமே ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு இதுவரை, 86 ஆயிரத்து 343 மனுக்களை பொதுமக்களிடம் இருந்து பெற்றுள்ளது. இதன்மூலம், ‘நீட்’ தேர்வால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்கள், நிவாரணம் கேட்டு இந்த குழுவை அணுகியுள்ளது தெளிவாகுகிறது.

மனுதாரர் மாணவரும் இல்லை. பெற்றோரும் இல்லை. அவர் ஒரு அரசியல்வாதி. விளம்பரத்துக்கு இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

அரசின் இறையாண்மை

மக்களின் குறைகளை கேட்டு, அதை நிவர்த்தி செய்வதே ஒரு அரசின் இறையாண்மையாகும். இதை எதிர்த்து வழக்கு தொடர முடியாது.

மக்கள் நல அரசின் பணி என்பது, பொதுமக்களின் நலனை பாதுகாப்பதுதான். ஆனால், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் ஒரு அரசின் அடிப்படை கடமையையும், பணியையும் தடுக்கும்விதமாக இந்த வழக்கை மனுதாரர் தாக்கல் செய்துள்ளார். ‘நீட்’ தேர்வு பாதிப்பு குறித்த அறிக்கையைத்தான் அரசுக்கு இந்த குழு வழங்க உள்ளது. இதனால், அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் எதுவும் மீறப்படவில்லை.

நுழைவுத்தேர்வு ரத்து

ஒரு சட்டத்தால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து ஆய்வு செய்வது, மாணவர்களின் பாதிப்பு குறித்து கேட்டறிவது என்பது அடிப்படை ஜனநாயகமாகும். 1984-ம் ஆண்டு அரசு பிறப்பித்த அரசாணையின் அடிப்படையில் பொது நுழைவுத்தேர்வு முறை கொண்டுவரப்பட்டது.

இந்த பொது நுழைவுத்தேர்வால் கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை அறிய முன்னாள் துணைவேந்தர் ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. மாணவர்களின் கருத்தைக் கேட்டு இந்த குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், 2006-ம் ஆண்டு பொது நுழைவுத்தேர்வு முறையை தமிழக அரசு ரத்து செய்தது.

இந்தக் குழு அளித்த துல்லியமான புள்ளிவிவரத்தின் அடிப்படையில், தமிழ்நாடு தொழிற்கல்வி மாணவர்கள் சேர்க்கை சட்டம் இயற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுடன் 2007-ம் ஆண்டு மார்ச் 7-ந் தேதி அமலுக்கு கொண்டுவரப்பட்டது.

முதல்-அமைச்சர் உத்தரவு

அதேபோல, ‘நீட்' தேர்வு முறையால், 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த கிராமப்புற மற்றும் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களால், மருத்துவ படிப்பில் சேர முடியவில்லை. மாநகரங்கள், நகரங்களைச் சேர்ந்த மாணவர்கள் தனியார் பயிற்சிப் பள்ளிகளில் சேர்ந்து, மீண்டும் மீண்டும் படித்து ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெறுகின்றனர். ‘நீட்’ தேர்வில் முதல் முறை தேர்ச்சிபெறுபவர்களைவிட, பல முறை முயற்சித்து வெற்றிபெறும் பழைய மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு ஒரேவிதமான பாடத்திட்டமும், பயிற்றுவிக்கும் முறையும் இல்லை. மாநில பாடத்திட்டத்துக்கும், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கும் வித்தியாசம் உள்ளது. இந்த பாகுபாட்டை நீக்கவே, ‘நீட்’ தேர்வின் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய முதல்-அமைச்சர் இந்தக் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளார்.

வைகோ வழக்கு

இக்குழுவை அமைத்ததால், சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு உத்தரவுகளை மீறியதாக கருத முடியாது. மக்களுக்கு, குறிப்பாக மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை அறிய குழு அமைத்தது வீண் செலவு என்று சொல்ல முடியாது. எனவே, விளம்பரத்துக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த பொதுநல வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கரு.நாகராஜன் வழக்குக்கு எதிராகம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் பலரது சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Next Story