மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் வழிபடுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு


மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் வழிபடுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
x
தினத்தந்தி 4 July 2021 7:54 PM GMT (Updated: 4 July 2021 7:54 PM GMT)

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பக்தர்கள் வழிபடுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன.





மதுரை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் சூழலில் இன்று முதல் ஒரே மாதிரியான தளர்வுகள் அமலுக்கு வருகின்றன.  இதன்படி, கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள், கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், பழனி உள்ளிட்ட முக்கிய கோவில்களில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

அந்த வகையில், உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.  அதில், மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இன்று முதல் (திங்கள் கிழமை) காலை 06.00 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரையும், மாலை 04.00 மணி முதல் இரவு 08.00 மணி வரையும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

கோவிலில் நடைபெறும் காலபூஜை, அபிஷேகம் ஆகியவற்றை காண பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மேற்கு மற்றும் வடக்கு நுழைவு வாயில் வழியே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். கோவிலில் தரிசனம் செய்த பின் எந்த ஒரு இடத்திலும் உட்கார பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

கோவிலுக்குள் பழம், தேங்காய் உள்ளிட்ட பூஜை பொருட்கள் கொண்டு வர தடை விதிக்கப்படுகிறது. அர்ச்சனை செய்வதற்கும் அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story