நெல்லை, தூத்துக்குடியில் திடீர் மழை; சூறைக்காற்றில் வீடுகள் சேதம்


நெல்லை, தூத்துக்குடியில் திடீர் மழை; சூறைக்காற்றில் வீடுகள் சேதம்
x
தினத்தந்தி 4 July 2021 10:35 PM GMT (Updated: 4 July 2021 10:35 PM GMT)

நெல்லை, தூத்துக்குடியில் நேற்று திடீர் மழை பெய்தது. சூறைக்காற்றுடன் கனமழை கொட்டியதால் வீட்டின் மேற்கூரைகள் பெயர்ந்து சேதமடைந்தன.

நெல்லையில் திடீர் மழை
அக்னி நட்சத்திர வெயில் முடிந்தாலும் நெல்லையில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் சுட்டெரித்தது. நேற்று காலை முதல் மதியம் வரையிலும் வழக்கம்போல் வெயில் வாட்டி வதைத்தது. இந்த நிலையில் பிற்பகல் 3 மணி அளவில் திடீரென்று வாகனத்தில் கருமேகங்கள் திரண்டு குளிர்ந்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது.நெல்லை சந்திப்பு, பாளையங்கோட்டை, டவுன், பேட்டை, பழைய பேட்டை, தச்சநல்லூர், சுத்தமல்லி, கொண்டாநகரம், தாழையூத்து, அம்பை, செங்குன்றம், முக்கூடல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. சில இடங்களில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டியது.

வீடுகள் சேதம்
சூறைக்காற்றுடன் பெய்த மழையால், அம்பை ஊர்க்காடு பகுதியைச் சேர்ந்த ராஜ் என்பவரது வீட்டின் பிளாஸ்டிக் தகடாலான மேற்கூரை பெயர்ந்து, பக்கத்து ெதருவில் உள்ள வீட்டின் மீது விழுந்தது. இதில் அந்த வீட்டில் இருந்த 2 பேர் காயமடைந்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள சில வீடுகளின் மேற்கூரை ஓடுகளும் சரிந்து சேதமடைந்தன. சூறைக்காற்றில் சில மரங்களும் முறிந்து விழுந்தன.தென்காசி, குற்றாலம், செங்கோட்டை, குண்டாறு, அடவிநயினார் அணை உள்ளிட்ட பகுதிகளிலும் மாலையில் பரவலாக மழை பெய்தது. தொடர்ந்து சாரல் மழை பெய்தது.

தூத்துக்குடி
தூத்துக்குடியில் நேற்று காலை முதல் மதியம் வரையிலும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் பிற்பகல் 3 மணி அளவில் கருமேகங்கள் திரண்டு கனமழை கொட்ட தொடங்கியது. சுமார் ½ மணி நேரம் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கிய மழையால் தூத்துக்குடி குளிரத் தொடங்கியது. தூத்துக்குடியில் தாழ்வான பல இடங்களில் மழைநீர் தேங்கி கிடந்தது.கயத்தாறு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மாலையில் சுமார் 1½ மணி நேரம் இடி, மின்னலுடன் மழை பெய்தது. கயத்தாறு அருகே தலையால்நடந்தான்குளம் கிராமத்தில் மழை பெய்தபோது, மின்னல் 
தாக்கியதில் முருகன் என்பவருக்கு சொந்தமான 2 மாடுகள் இறந்தன. இதேபோன்று கயத்தாறு புதுக்கோட்டையில் சவுந்தரராஜனுக்கு சொந்தமான மாடும் மின்னல் தாக்கியதில் இறந்தது.

Next Story