பூரண மதுவிலக்கு, அனைத்து சாதியினருக்கும் இடஒதுக்கீடு; தமிழக பட்ஜெட்டில் நிறைவேற்ற டாக்டர் ராமதாஸ் கோரிக்கை


பூரண மதுவிலக்கு, அனைத்து சாதியினருக்கும் இடஒதுக்கீடு; தமிழக பட்ஜெட்டில் நிறைவேற்ற டாக்டர் ராமதாஸ் கோரிக்கை
x
தினத்தந்தி 5 July 2021 10:00 PM GMT (Updated: 5 July 2021 10:00 PM GMT)

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு, அனைத்து சாதியினருக்கும் உள் இடஒதுக்கீடு உள்பட அறிவிப்புகளுடன் பா.ம.க. சார்பில் நிழல் பட்ஜெட் வெளியிடப்பட்டது. இதனை தமிழக அரசு பட்ஜெட்டில் நிறைவேற்ற வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

நிழல் பட்ஜெட்
தமிழக அரசின் பட்ஜெட் (நிதி நிலை அறிக்கை) தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக, பா.ம.க. சார்பில் நிழல் வேளாண்மை பட்ஜெட், நிழல் பொது பட்ஜெட் தனித்தனியாக வெளியிடப்பட்டு வருகிறது. அந்தவகையில் பா.ம.க. நிழல் வேளாண்மை பட்ஜெட் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இந்தநிலையில் பா.ம.க.வின் 19-வது நிழல் பொது பட்ஜெட் நேற்று வெளியிடப்பட்டது. 

சென்னை தியாகராயநகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நிழல் பட்ஜெட் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் காணொலி மூலம் பங்கேற்றனர். பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, சமூக நீதி பேரவை தலைவர் வக்கீல் கே.பாலு உள்ளிட்டோர் நேரில் கலந்துகொண்டனர். பா.ம.க. நிழல் பட்ஜெட்டை பா.ம.க. பொருளாளர் திலகபாமா வெளியிட, பெண் பத்திரிகையாளர் பெற்றுக்கொண்டார்.

பூரண மதுவிலக்கு

பா.ம.க. நிழல் பட்ஜெட்டில் உள்ள சிறப்பம்சங்கள் வருமாறு:-

* கொரோனாவால் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கப்படும்.

* அண்ணா பல்கலைக்கழகம் உயர் சிறப்பு கல்வி நிறுவனமாக மாற்றப்படும்.

* தமிழ்நாட்டில் தொழில், உற்பத்தி, தளவாட மேலாண்மை உள்ளிட்டவற்றின் மூலமாக அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.

* வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். ஏழை குடும்பங்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.

* தமிழ்நாட்டில் ஆகஸ்டு 15-ந் தேதி (சுதந்திர தினம்) முதல் முழுமையான மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும்.

காலை உணவுத்திட்டம்

* தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.25 லட்சம் கோடியில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

* ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்படும். மருத்துவ படிப்புகளில் ஈழத்தமிழர்களுக்கு 10 இடங்கள் சிறப்பு ஒதுக்கீடாக வழங்கப்படும்.

* அரசு பள்ளிகளில் காலை உணவுத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும். மதிய உணவில் சிறு தானிய உணவுகள் வழங்கப்படும்.

* தமிழ்நாட்டில் அனைத்து அரசு வேலைவாய்ப்புகளும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். தனியார் நிறுவனங்களில் 80 சதவீத பணியிடங்கள் தமிழக இளைஞர்களை கொண்டு நிரப்பப்பட வேண்டும் என்று புதிய சட்டம் இயற்றப்படும்.

அனைத்து சாதியினருக்கும் இடஒதுக்கீடு

* சென்னையில் அனைத்து நகர பஸ்களிலும் அனைவரும் இலவசமாக பயணிக்கலாம். மற்ற மாவட்டங்களில் நகர பஸ்களில் பெண்கள், குழந்தைகள் இலவசமாக பயணம் செய்யலாம்.

* 2021-22-ம் ஆண்டில் தஞ்சை, திருவண்ணாமலை, சேலம், கடலூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்கள் பிரிக்கப்படும். 12 லட்சம் மக்கள் தொகைக்கு ஒரு மாவட்டம் என்ற அளவில் மாவட்டங்கள் மறுசீரமைக்கப்படும். இதன் மூலம் தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 60 மாவட்டங்கள் இருக்கும்.

* வன்னியர் உள் இடஒதுக்கீடு சட்டம் செயல்படுத்தப்படும். அனைத்து சாதியினருக்கும் உள் ஒதுக்கீடு வழங்கப்படும்.

* சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம் ரத்து செய்யப்படும். மாநில நெடுஞ்சாலைகளில் சுங்கக்கட்டணம் முற்றிலுமாக ரத்து செய்யப்படும். சென்னை-கன்னியாகுமரி கிழக்கு கடற்கரை சாலை 8 வழிச்சாலையாக மாற்றப்படும்.

* தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மணல் குவாரிகளும் உடனடியாக மூடப்படும்.

* அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதியத்திட்டம் ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்.

மேற்கண்ட அறிவிப்புகள் பா.ம.க.. நிழல் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன.

டாக்டர் ராமதாஸ் கோரிக்கை

நிகழ்ச்சியில் டாக்டர் ராமதாஸ் பேசும்போது, ‘ பா.ம.க.வின் நிழல் நிதிநிலை அறிக்கையை தமிழக அரசு நிறைவேற்றினால் தமிழகம் வளர்ச்சி பாதையில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழும். எனவே பா.ம.க.வின் நிழல் நிதி நிலை அறிக்கையில் உள்ள அம்சங்களை தமிழக அரசு ஆராய்ந்து பட்ஜெட்டில் இடம் பெற செய்ய வேண்டும்.’ என்றார். பின்னர் டாக்டர் ராமதாசே கேள்வி எழுப்பி, அதற்கு பதிலும் அளித்தார்.

கேள்வி:- நிழல் என்ற வார்த்தை இல்லாமல் பா.ம.க. சார்பில் எப்போது பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்?

பதில்:- ஊடகத்துறையினர் எங்களுடன் நிரந்தர கூட்டணி வைத்து, ஆதரவு தெரிவித்தால் அடுத்த 5 ஆண்டுகளில் சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story