நாங்கள் மத்திய அரசு என்றுதான் அழைப்போம்; ஒன்றிய அரசு என்று கூறுவதால் எந்த பயனும் இல்லை: அன்புமணி ராமதாஸ்


நாங்கள் மத்திய அரசு என்றுதான் அழைப்போம்; ஒன்றிய அரசு என்று கூறுவதால் எந்த பயனும் இல்லை: அன்புமணி ராமதாஸ்
x
தினத்தந்தி 5 July 2021 11:02 PM GMT (Updated: 5 July 2021 11:02 PM GMT)

ஒன்றிய அரசு என்று அழைப்பதில் எந்த பயனும் இல்லை. நாங்கள் மத்திய அரசு என்றுதான் அழைப்போம் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

கொரோனா தடுப்பூசி

பா.ம.க. நிழல் பட்ஜெட் வெளியீட்டு நிகழ்ச்சியின் போது, பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-
பா.ம.க. ஆளுங்கட்சியாக இல்லாவிட்டாலும், ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுகிறோம் என்ற வகையில் தொடர்ந்து நிழல் பட்ஜெட்டை வெளியிட்டு வருகிறோம். தி.மு.க. ஆட்சி முழுமையாக கொரோனா பணியில் ஈடுபட்டதால் நாம் அதிலிருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறோம். அதேபோன்று 3-வது அலையை தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும். அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டால் தான் கொரோனாவை ஒழிக்க முடியும்.இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகள் கொரோனா இருக்கும் என்கிறார்கள். எனவே செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தை மத்திய அரசு தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும். இங்கு ஓராண்டுக்கு 100 கோடி தடுப்பூசி தயாரிக்கும் வசதி உள்ளது.

பெயரை மாற்றினால்...
எங்களை பொறுத்தவரையில் மத்திய அரசு என்றுதான் அழைப்போம். ஒன்றிய அரசு என்று பெயரை மாற்றி அழைத்தால் ஒன்றும் ஆகப்போவதில்லை. மத்திய அரசுடன் நல்ல அணுகுமுறையுடன் இருந்து நல்ல திட்டங்களை தமிழகத்துக்கு கொண்டு வர வேண்டும்.மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த கூடாது. தமிழ்நாட்டின் உயிர்நாடி பிரச்சினை என்பதால் சட்டரீதியாகத்தான் அணுக வேண்டும். பெட்ரோல்-டீசல் விலையில் 65 சதவீதம் மத்திய, மாநில அரசுகளுக்கு வரியாக செல்கிறது. 
எனவே பெட்ரோல்-டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வந்தால் அதிகபட்சம் 30 சதவீதம்தான் வரி இருக்கும்.

வன்னியர் உள் இட ஒதுக்கீடு
தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் பெட்ரோல்-டீசல் விலையை குறைப்போம் என்று சொன்னார்கள். தற்போது ஆட்சிக்கு வந்ததும் எப்போது குறைப்போம் என்று தேதி சொல்லவில்லையே? என்கிறார்கள். இது ஆக்கப்பூர்வமான செயல்பாடு அல்ல. இப்போது பசிக்கிறது என்றால் இப்போது தான் சாப்பாடு போட வேண்டும். 4, 5 நாட்கள் கழித்து போடக்கூடாது. வன்னியர் உள் இட 
ஒதுக்கீடு என்பது சாதி பிரச்சினை இல்லை. சமூக நீதி பிரச்சினை. இதுதொடர்பாக சட்டமன்றத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி எழுப்பிய கேள்விக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘வன்னியர் உள் இட ஒதுக்கீடு விவகாரம் குறித்து பரிசீலனை செய்து நல்ல முடிவை அறிவிப்பதாக கூறியிருக்கிறார். எல்லா சமுதாயத்துக்கும் இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும் 
என்பதுதான் பா.ம.க.வின் நிலைப்பாடு.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story