கொடைக்கானலில் பூங்காக்களை தற்காலிகமாக மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவு


கொடைக்கானலில் பூங்காக்களை தற்காலிகமாக மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவு
x
தினத்தந்தி 6 July 2021 4:25 PM GMT (Updated: 6 July 2021 4:25 PM GMT)

கொரோனா பரவும் சூழல் ஏற்பட்டதால் கொடைக்கானலில் பூங்காக்களை தற்காலிகமாக மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல்,

தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள சுற்றுலாத் தலங்களான பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஸ் கார்டன் ஆகியவை 75 தினங்களுக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டன.

கொடைக்கானலில் உள்ள படகு சவாரி, குணா குகை, தூண்பாறை, மோயர் பாய்ண்ட், கோக்கர்ஸ்வாக் ஆகிய சுற்றுலாத்தலங்கள் திறக்கப்படாத நிலையில் பூங்காக்கள் மட்டும் திறக்கப்பட்டதால் கொடைக்கானல் வந்த சுற்றுலா பயணிகள் முழுவதுமாக பூங்காக்களில் குவியத்தொடங்கினர். இதனால் சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளை பின்பற்ற முடியாத நிலை உருவானது. 

இதன் காரணமாக கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டதால், பூங்காக்களை திறப்பது குறித்து திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மறுபரிசீலனை செய்தது. இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படி, கொடைக்கானல் கோட்டாட்சியர் முருகேசன், கடந்த 2 நாட்களாக திறக்கப்பட்ட பூங்காக்கள் அனைத்தையும் மூட உத்தரவிட்டுள்ளார். இருப்பினும் பேருந்து போக்குவரத்து வழக்கம் போல் இருக்கும் என்பதால் சுற்றுலாபயணிகள் கொடைக்கானல் செல்ல எந்த தடையும் இல்லை என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story