மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைகிறது கர்நாடகாவிடம் காவிரி நீரை கேட்டுப்பெற வேண்டும் தமிழக அரசுக்கு, டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைகிறது கர்நாடகாவிடம் காவிரி நீரை கேட்டுப்பெற வேண்டும் தமிழக அரசுக்கு, டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 8 July 2021 12:13 AM GMT (Updated: 8 July 2021 12:13 AM GMT)

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைகிறது கர்நாடகாவிடம் காவிரி நீரை கேட்டுப்பெற வேண்டும் தமிழக அரசுக்கு, டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காவிரிப் பாசன மாவட்டங்களில் குறுவைப் பருவ நடவுப் பணிகள் கூட இன்னும் நிறைவடையாத நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 77.29 அடியாக குறைந்திருக்கிறது.

குறுவை நெல் சாகுபடிக்கு இன்னும் குறைந்தது 100 நாட்களுக்காவது தண்ணீர் தேவைப்படும் நிலையில், நீர்மட்டம் குறைந்திருப்பதும், கர்நாடக அரசு உரிய அளவு தண்ணீர் வழங்காததும் கவலையளிக்கிறது. காவிரி பாசன மாவட்ட விவசாயிகள் கடந்த 2012-ம் ஆண்டில் தொடங்கி 2019-ம் ஆண்டு வரை தொடர்ந்து 8 ஆண்டுகளாக குறுவை சாகுபடியை வெற்றிகரமாக செய்ய முடியவில்லை.

கடந்த ஆண்டு மட்டும் தான் உரிய காலத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டு, தொடர்ந்து நீர் வழங்கப்பட்டதால் 4 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பில் குறுவை சாகுபடி செய்து லாபம் ஈட்டினார்கள். நடப்பாண்டும் குறுவை சாகுபடி வெற்றிகரமாக அமையும் என்று அவர்கள் நம்பிக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களின் நம்பிக்கையை இயற்கையும், கர்நாடக அரசும் சிதைப்பதற்கு அனுமதிக்கக்கூடாது.

எனவே மத்திய அரசு, காவிரி மேலாண்மை ஆணையம் என எந்தெந்த வழிகளில் அழுத்தம் தர முடியுமோ, அனைத்து வழிகளிலும் அழுத்தம் கொடுத்து ஜூன், ஜூலை மாதங்களுக்கு வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு காவிரியில் திறந்துவிடுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். அதன்மூலம் காவிரி பாசன மாவட்ட விவசாயிகளின் குறுவைப் பயிர்களைக் காப்பாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story