சிறுபான்மையினர் ஆணைய தலைவராக பீட்டர் அல்போன்ஸ் பதவியேற்பு “முதல்-அமைச்சரின் நல்லெண்ண தூதுவராக இருப்பேன்” என பேட்டி


சிறுபான்மையினர் ஆணைய தலைவராக பீட்டர் அல்போன்ஸ் பதவியேற்பு “முதல்-அமைச்சரின் நல்லெண்ண தூதுவராக இருப்பேன்” என பேட்டி
x
தினத்தந்தி 8 July 2021 12:20 AM GMT (Updated: 8 July 2021 12:20 AM GMT)

சிறுபான்மையினர் ஆணைய தலைவராக பீட்டர் அல்போன்ஸ் நேற்று பதவியேற்று கொண்டார். அவர் முதல்-அமைச்சரின் நல்லெண்ண தூதுவராக இருப்பேன் என தெரிவித்தார்.

சென்னை,

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம், சிறுபான்மையினரின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்காக செயல்பட்டு வருகிறது. இந்த ஆணையத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருத்தியமைத்து, அதன் தலைவராக பீட்டர் அல்போன்சை நியமித்து கடந்த மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அதன்படி, சென்னை அண்ணா சாலையில் இதற்கென்று தனியாக ஏற்படுத்தப்பட்டு இருக்கும் அலுவலகத்தில் சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக பீட்டர் அல்போன்ஸ் நேற்று பதவியேற்று கொண்டார். துணைத்தலைவராக தி.மு.க.வை சேர்ந்த மஸ்தானும், உறுப்பினர்களாக தமீம் அன்சாரி, ஹர்பஜன் சிங் சூரி, மன்ஞ்ஜித் சிங் நய்யர், பைரேலால் ஜெயின் உள்ளிட்ட 6 உறுப்பினர்களும் பொறுப்பேற்றனர்.

இதனைத் தொடர்ந்து பீட்டர் அல்போன்ஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

நல்லெண்ண தூதுவராக இருப்பேன்

சிறுபான்மை மக்கள் மீது பெரும் கரிசனமும், பேரன்பும் கொண்டு இருக்கிற முதல்-அமைச்சர், இந்த ஆணையத்தின் மூலமாக சிறுபான்மை மக்களின் உரிமைகளையும், அவர்களுக்கு இருக்கின்ற வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள எங்களை அறிவுறுத்தி இருக்கிறார்.

மத சிறுபான்மையினர், மொழி சிறுபான்மையினர் இவர்கள் இருவரும் ஏறக்குறைய தமிழக மக்கள் தொகையில் 35 சதவீதம் இருக்கிறார்கள். இவர்களின் உரிமைகளை, வாழ்வாதாரங்களை அவர்களையும் தமிழகத்தின் முன்னேற்றத்தில் ஒருங்கிணைத்து, அவர்களின் பங்களிப்பையும் தமிழகத்தின் வளர்ச்சிக்கு பெற்றுத்தருவதற்கான முதல்-அமைச்சரின் நல்லெண்ண தூதுவர்களாக நாங்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறோம்.

ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமனம்

அதற்கேற்றாற்போல், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அவர்களின் தேவைகள், பிரச்சினைகளை அறிந்து, அதை அரசின் கவனத்துக்கு கொண்டு வந்து, எதிர்காலத்தில் நல்ல பணியை ஆற்றுவதற்கு துணையாக இருப்போம்.

இடஒதுக்கீட்டின் பயன் முழுமையாக சிறுபான்மையினருக்கு சென்று அடைந்திருக்கிறதா?, சிறுபான்மை சமூக மக்களுக்காக அரசு கொடுத்து இருக்கும் திட்டங்கள் அவர்களுக்கு கிடைத்து இருக்கிறதா? அப்படி சேரவில்லையென்றால் அதற்கான காரணம் என்ன? என்பதையெல்லாம் ஆராய்ந்து அரசுக்கு நாங்கள் அறிக்கை கொடுப்போம். இதற்கு முழுநேரமாக ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story