‘நீட்’ தேர்வு விவகாரம்: யாரும் அரசியல் செய்து மாணவர்களை குழப்ப வேண்டாம் - ஜி.கே.வாசன் பேட்டி


‘நீட்’ தேர்வு விவகாரம்: யாரும் அரசியல் செய்து மாணவர்களை குழப்ப வேண்டாம் - ஜி.கே.வாசன் பேட்டி
x
தினத்தந்தி 8 July 2021 9:02 PM GMT (Updated: 8 July 2021 9:02 PM GMT)

‘நீட்’ தேர்வு விவகாரத்தில் யாரும் அரசியல் செய்து மாணவர்களை குழப்ப வேண்டாம் என்று திருச்சியில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

மலைக்கோட்டை, 

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் டெல்டா மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார். 

முன்னதாக த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து எந்த கட்சியும் விலகவில்லை. த.மா.கா.வும் கூட்டணியில் நீடிக்கிறது என கூறுவதில் எனக்கு எந்த தயக்கமும் கிடையாது. த.மா.கா. தோல்வி அடைந்ததற்கு இரட்டை இலையும் காரணம் இல்லை, இரட்டை தலைமையும் காரணம் இல்லை.

மத்திய அரசு மாநிலங்களுக்கு தடுப்பூசி வழங்குவதில் பாரபட்சம் காட்டவில்லை. காட்டக்கூடாது. தங்கு தடையின்றி தடுப்பூசியை நூறு சதவீதம் மக்களுக்கு செலுத்த குறிப்பிட்ட காலக்கெடுவை மத்திய அரசும், மாநில அரசும் நிர்ணயிக்க வேண்டும்.

‘நீட்’ தேர்வில் அரசியலைப் புகுத்தி மாணவர்களின் மனநிலையை குழப்ப வேண்டாம். மாணவர்கள் ‘நீட்’ தேர்வுக்கு தயாராக இருக்கிறார்கள். அவர்கள் குழப்பம் அடையாமல் தயாராக வேண்டும்.

‘நீட்’ தேர்வை ரத்து செய்யும் முடிவு ஆட்சி செய்தவர்கள் கையிலும் இல்லை, தற்போது ஆட்சி செய்பவர்கள் கையிலும் இல்லை. அது நீதிமன்றத்தின் முடிவில் உள்ளது. எனவே ‘நீட்’ தேர்வு விவகாரத்தில் யாரும் அரசியல் செய்து மாணவர்களை குழப்ப வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story