தமிழகத்தில் ஊரடங்கில் புதிய தளர்வுகள் இன்று முதல் அமல்... எவை இயங்கும்? எவை இயங்காது?


தமிழகத்தில் ஊரடங்கில் புதிய தளர்வுகள் இன்று முதல் அமல்... எவை இயங்கும்? எவை இயங்காது?
x
தினத்தந்தி 12 July 2021 1:00 AM GMT (Updated: 12 July 2021 1:00 AM GMT)

இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் செயல்பாடுகள் இன்று முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

சென்னை,

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் 2-வது அலையில், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்த நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கடந்த மே மாதம்24-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. 

தொற்று பாதிப்பின் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களும் 3 வகையாக பிரிக்கப்பட்டு, தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன.

கடந்த முறை ஊரடங்கு தளர்வின்போது, மாவட்டங்களை வகைப்படுத்தும் முறை நிறுத்தப்பட்டு, மீண்டும் ஒன்றாகவே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. அதன்படி, 8-வது முறையாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு இன்றுடன் (திங்கட்கிழமை) முடிவடைகிறது.

எனவே, அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய நிலையில், பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கை, 9-வது முறையாக மேலும் ஒரு வார காலத்திற்கு வருகிற 19-ந் தேதி வரை நீட்டித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில்

தற்போது தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், மாநிலத்தின் கொரோனா நோய்த்தொற்று நிலையை கண்காணித்து தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு 19-7-2021 காலை 6 மணி வரை நீட்டிக்கப்படுகிறது.

நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக திருமண நிகழ்வுகளில் 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இறுதிச்சடங்குகளில் 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர, அனைத்து பகுதிகளிலும், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும். மேலும், ஏற்கனவே இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் செயல்பாடுகள் இன்று முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

மேலும், கூடுதல் செயல்பாடுகளும் அனுமதிக்கப்படுகின்றன. அதாவது, புதுச்சேரிக்கான பஸ் சேவை தொடங்கப்படுகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் வேலைவாய்ப்பு தொடர்பான எழுத்துத்தேர்வுகள் அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. இதுகுறித்த விவரங்களை தேர்வு நடத்தும் அமைப்புகள் முன்னதாக மாவட்ட கலெக்டரிடம் தெரிவிக்க வேண்டும்.

உணவகங்கள், டீக்கடைகள், அடுமனைகள் (பேக்கரி), நடைபாதை கடைகள், இனிப்பு, காரவகை பண்டங்கள் விற்பனை கடைகள் ஆகியவை வழக்கமான நிபந்தனைகளுக்குட்பட்டு 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இரவு 9 மணிவரை செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.

அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து கடைகள் மற்றும் பொதுமக்கள் கூடக்கூடிய இடங்களில், கை சுத்திகரிப்பான்கள் கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்பநிலை பரிசோதனை கருவிகொண்டு பரிசோதனை செய்ய வேண்டும். கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முக கவசம் அணிவதை சம்மந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

குளிர்சாதன வசதி பயன்படுத்தப்படும் இடங்களில் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் திறக்கப்பட்டு போதுமான காற்றோட்ட வசதியுடன் செயல்படுவதோடு, கடைகளில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது.

கடைகளின் நுழைவுவாயிலில் பொதுமக்கள் வரிசையில் காத்திருக்கும்போது, ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும்.

நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்களை கண்டறிதல், நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுதல் ஆகிய கோட்பாடுகள் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும்.

கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்கு, நோய்த்தொற்று பாதிப்பிற்கு உள்ளானவர்கள் உள்ள பகுதிகளில், நோய் கட்டுப்பாட்டு மண்டல எல்லைகளை நுண்ணளவு வரை வரையறை செய்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளின்படி, தீவிரமாக நோய் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட கலெக்டர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும்.

வரையறுக்கப்பட்ட நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வேண்டும். இந்த நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், மருத்துவ அவசர சேவைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல் தவிர, இதர செயல்பாடுகளுக்கு அனுமதி இல்லை.

Next Story