காவிரி பிரச்சினை: தமிழக கட்சிகளுக்கு ஒரே சிந்தனை என்பதை மத்திய அரசுக்கு உணர்த்த வேண்டும் மு.க.ஸ்டாலின் பேச்சு


காவிரி பிரச்சினை: தமிழக கட்சிகளுக்கு ஒரே சிந்தனை என்பதை மத்திய அரசுக்கு உணர்த்த வேண்டும் மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 13 July 2021 2:34 AM GMT (Updated: 13 July 2021 2:34 AM GMT)

காவிரி பிரச்சினையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் ஒரே சிந்தனை என்பதை மத்திய அரசுக்கு உணர்த்த வேண்டும் என்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை, 

மேகதாது அணை பிரச்சினை குறித்து சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் போது கூறியதாவது:-

மிக மிக முக்கியமான பிரச்சினை தொடர்பாக நாம் அவசரமாக கூடி இருக்கிறோம். நாம் அனைவரும் வெவ்வேறு கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் காவிரி பிரச்சினையில் அனைவருக்கும் ஒன்றுபட்ட கருத்துதான் இருக்கும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை.

தமிழகத்துக்கு காவிரி என்பது வாழ்வுரிமையாகும். அது எந்தளவு உண்மையோ, அந்த அளவுக்கு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டினால் தமிழ்நாட்டு விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதும் உண்மை.

காவிரி விவகாரத்தில் தமிழகமும், தமிழகத்தில் உள்ள அனைத்துக்கட்சிகளும் ஒன்றுபட்ட ஒரே சிந்தனையோடு இருக்கின்றன என்பதை நாம் கர்நாடகாவுக்கு மட்டுமல்ல, மத்திய அரசுக்கும் உணர்த்தியாக வேண்டும்.

இன்று மிக முக்கியமான பிரச்சினையாக இருப்பது மேகதாது அணை. காவிரியின் குறுக்கே நமது மாநில எல்லையில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் மேகதாது அணையைக் கட்ட, கர்நாடக அரசு முயன்று வருகிறது.

இதனை நாம் அனைத்து முயற்சிகளையும் எடுத்து தடுத்தாக வேண்டும். மேகதாது அணை கட்டப்பட்டால் நமது விவசாயிகளின் நலன் மோசமான நிலைமையை அடையும். இந்த அணை கட்டப்படுவதால் தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கர்நாடகம் சொல்லி வருகிறது. இதில் துளியளவும் உண்மை இல்லை. தமிழகம் முழுமையாக பாதிக்கப்படும்.

வழக்கமான காலத்திலேயே நமக்கு தரவேண்டிய நீரை கர்நாடகம் வழங்குவது இல்லை. இதுபோன்ற சூழலில், காவிரியின் குறுக்கே 67.16 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட, மேலும் ஒரு அணை கர்நாடக அரசால் அமைக்கப்பட்டால் நமது விவசாயிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.

பெங்களூர் நகரத்தின் குடிநீர் தேவைக்காகவும், மின் உற்பத்திக்காகவும் இந்த அணையை கட்டுவதாக கர்நாடகம் சொல்வது உண்மையல்ல. அது நம்மை ஏமாற்றுவதற்காக சொல்வது.

மேகதாதுவில் அணை அமைக்கப்பட்டால் நமக்கு கிடைத்துவரும் நீர் அனைத்தும் இந்த புதிய அணையில் தேக்கி வைக்கப்பட்டு கர்நாடக மாநிலம் பயன்படுத்தியது போக எஞ்சிய நீர் மட்டுமே நமக்கு வழங்கப்படும் நிலைதான் உண்மையாக ஏற்படும்.

இதை கருத்தில்கொண்டு தான் பல ஆண்டுகளாக இந்த இடத்தில் அணை கட்டுவதற்கான முயற்சிகளுக்கு எதிராக நாம் பல போராட்டங்களையும், முயற்சிகளையும் எடுத்து வருகிறோம்.

காவிரி பிரச்சினை என்பது அரசியல் பிரச்சினை அல்ல. தமிழ்நாட்டு மக்களின் வாழ்வுரிமை பிரச்சினை. விவசாய மக்களின் வாழ்க்கை பிரச்சினை. அதில் அரசியல் நோக்கங்களைத் தவிர்த்து அனைவரும் ஒருங்கிணைந்த முடிவுக்கு வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

வாழ்வாதார பிரச்சினையில் தமிழ்நாடு ஒரே சிந்தனையில் நின்றது என்பதை நாம் காட்டியாக வேண்டும்.

மேகதாது அணையை எந்த சூழலிலும் அனுமதிக்க மாட்டோம். அதில் தமிழ்நாடு அரசு உறுதியாக இருக்கிறது. அந்த உறுதிக்கு உங்கள் அனைவரது ஒத்துழைப்பும் நிச்சயம் இருக்கும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story