200 கேள்விகளில் 180-க்கு பதில் அளிக்க வாய்ப்பு: ‘நீட்’ தேர்வு வினாத்தாளில் மாற்றம்


200 கேள்விகளில் 180-க்கு பதில் அளிக்க வாய்ப்பு: ‘நீட்’ தேர்வு வினாத்தாளில் மாற்றம்
x
தினத்தந்தி 15 July 2021 3:29 AM GMT (Updated: 15 July 2021 3:29 AM GMT)

‘நீட்’ தேர்வு வினாத்தாளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. 200 கேள்விகளில் 180-க்கு பதில் அளித்தால் போதும் என்ற வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை, 

கொரோனா தொற்று காரணமாக நடப்பு கல்வியாண்டுக்கான ‘நீட்’ தேர்வு கடந்த ஆண்டை போல தாமதமாகவே நடைபெற இருக்கிறது. அந்த வகையில் நடப்பு கல்வியாண்டு இளநிலை மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ தேர்வு செப்டம்பர் மாதம் 12-ந் தேதி நடைபெற இருப்பதாக மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் நேற்று முன்தினம் அறிவித்தார்.

இதில் பங்குபெற நேற்று முன்தினம் மாலை 5 மணி முதல் விண்ணப்ப பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ‘நீட்’ தேர்வுக்கான வினாத்தாள் வடிவமைப்பு முறையில் குறிப்பிட்ட சில மாற்றங்களை கொண்டுவந்திருப்பதாக தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) அறிவித்திருக்கிறது.

ஏற்கனவே உள்ள வினாத்தாள் வடிவமைப்புபடி, இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய 4 பாடங்களில் இருந்து தலா 45 வினாக்கள் வீதம் மொத்தம் 180 வினாக்கள் கேட்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு வினாவுக்கும் 4 மதிப்பெண் என்ற அடிப்படையில் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு ‘நீட்’ தேர்வு மதிப்பெண் கணக்கிடப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

அதேபோல்தான் நடப்பு ஆண்டிலும் 720 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெற இருக்கிறது. ஆனால் 180 வினாக்கள் என்று இருந்ததை தற்போது 200 வினாக்களாக அதிகரித்து, புதிய வினாத்தாள் முறையை கொண்டுவந்திருக்கின்றனர்.

அதாவது இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய 4 பாடங்களில், ஒவ்வொரு பாடத்திலும் ‘ஏ’ பிரிவில் 35 வினாக்கள், ‘பி' பிரிவில் 15 வினாக்கள் என 50 வினாக்கள் அடிப்படையில் மொத்தம் 200 கொள்குறி வகை வினாக்கள் கேட்கப்பட உள்ளன.

அவற்றில் ‘பி’ பிரிவில் உள்ள 15 வினாக்களில் 10 வினாக்களுக்கு பதில் அளிக்கும் வகையில் விருப்ப வினாத்தாள் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் பார்க்கும்போது, மாணவர்கள் 180 வினாக்களுக்கு மட்டும் பதில் அளித்தால் போதும்.

இது தவிர, ஒரு வினாவுக்கு 4 மதிப்பெண், தவறாக விடையளிக்கும் வினாவுக்கு ஒரு மதிப்பெண் குறைப்பது என்பது உள்பட மற்ற அனைத்து வினாத்தாள் வடிவமைப்புகளும் பழைய முறைப்படியே இருக்கிறது.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்வி வாரியங்களும் மாணவர்களின் சுமையை குறைக்கும் வகையில் பாடங்களை குறைந்திருந்தன. அதை கருத்தில் கொண்டு, தேசிய தேர்வு முகமை இந்த புதிய வினாத்தாள் வடிவமைப்பு முறையை கொண்டு வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை அடிப்படையாக வைத்து வடிவமைக்கப்பட்ட மாதிரி வினாத்தாள் https://www.nmc.org.in/neet/neet-ug என்ற தேசிய மருத்துவ ஆணையத்தின் இணையதளத்தில் உள்ளது. அதை மாணவ-மாணவிகள் பார்த்து தெரிந்துகொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.


Next Story