கூட்டுறவு சங்கங்களில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் மோசடி அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு


கூட்டுறவு சங்கங்களில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் மோசடி அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 16 July 2021 4:27 AM GMT (Updated: 16 July 2021 4:27 AM GMT)

அ.தி.மு.க., ஆட்சியின் போது கூட்டுறவு சங்கங்களில் கடன் வழங்கியதில் ரூ.9 ஆயிரம் கோடி வரை மோசடி நடந்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கிற்கு அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

சென்னை ஐகோர்ட்டில், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த விஸ்வலிங்கசாமி என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு கடந்த 2018-ம் ஆண்டு தேர்தல் நடந்தது. அப்போது, திருப்பூர் மாணிக்காபுரம் புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க இயக்குனர் பதவிக்கு போட்டியிட விண்ணப்பித்தேன். ஆனால், தேர்தல் நடத்தாமலேயே சட்டவிரோதமாக வேறொருவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதேபோல், கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தமிழகம் முழுவதும் 95 சதவீத கூட்டுறவு சங்கங்களுக்கு முறையான தேர்தல் நடத்தாமல் அ.தி.மு.க. வை சேர்ந்த நிர்வாகிகளே தன்னிச்சையாக தேர்வு செய்யப்பட்டனர்.

கூட்டுறவு சங்கங்களில் சுமார் ரூ.9 ஆயிரம் கோடி அளவிற்கு கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கடன் மோசடி நடைபெற்றுள்ளது. கடந்த ஆட்சி காலத்தில் ஆளுங்கட்சியின் நிர்வாகிகளே தலைவர்களாக இருந்ததால், தங்களுடைய பினாமிகளுக்கே கடன் வழங்கினர். போலி ஆவணங்கள் மூலம் பினாமிகளுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளன. தற்போது தமிழக முதல்-அமைச்சர் அறிவித்துள்ள கூட்டுறவு சங்க கடன் தள்ளுபடி ரூ.11 ஆயிரத்து 500 கோடியில் அ.தி.மு.க.,வை சேர்ந்தவர்களே பயன்பெற்றுள்ளனர். எனவே, இதுகுறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது குறித்து தமிழக அரசு உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரத்திற்கு தள்ளி வைத்தனர்.

Next Story