வழக்குப்பதிவு செய்யாமல் மணல் கடத்தியவர்கள் விடுவிப்பு: போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடைநீக்கம்


வழக்குப்பதிவு செய்யாமல் மணல் கடத்தியவர்கள் விடுவிப்பு: போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடைநீக்கம்
x
தினத்தந்தி 17 July 2021 4:17 AM GMT (Updated: 17 July 2021 4:17 AM GMT)

வழக்குப்பதிவு செய்யாமல் மணல் கடத்தியவர்களை விடுவித்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.

திருச்சி, 

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த முத்தபுடையான்பட்டி ரெயில்வே பாலம் அருகே 2 லாரிகளில் பொக்லைன் எந்திரம் மூலம் மணல் அள்ளிக்கொண்டிருப்பதாக திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் தனிப்படை போலீசார் கடந்த 13-ந்தேதி அதிகாலை முத்தப்புடையான்பட்டிக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு ஏற்கனவே குவித்து வைக்கப்பட்டிருந்த மணலை சட்டவிரோதமாக பொக்லைன் எந்திரம் உதவியுடன் 2 லாரிகளில் ஏற்றிக்கொண்டிருந்தனர். உடனே, 3 வாகனங்களையும் பறிமுதல் செய்த தனிப்படை போலீசார், அந்த வாகனங்களின் டிரைவர்கள் 3 பேரையும் பிடித்து மணப்பாறை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், மணப்பாறை கிழக்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் எஸ்.ஆரோக்கியசாமியின் கட்டுப்பாட்டில் தான் மணல் கடத்தல் நடைபெற்றதாக தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர் கொடுத்த அழுத்தம் காரணமாக, பிடிபட்ட சில மணி நேரத்திலேயே 3 டிரைவர்களையும் விடுவித்த போலீசார், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களையும் திரும்ப ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் மணப்பாறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், சமூக ஆர்வலர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும் இதுகுறித்து தமிழக போலீஸ் டி.ஜி.பி.யின் கவனத்துக்கும் உடனடியாக கொண்டு செல்லப்பட்டது.

இதைத்தொடர்ந்து மணல் கடத்தலில் ஈடுபட்டு தனிப்படை போலீசாரால் பிடித்து ஒப்படைக்கப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்யவும், விடுவிக்கப்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்யவும் டி.ஜி.பி. திருச்சி மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிட்டதாக தெரிகிறது. இதனால் 3 டிரைவர்களையும் கைது செய்ய ஆரோக்கியசாமியின் வீட்டிற்கு மணப்பாறை போலீசார் சென்றபோது, அவர்கள் அங்கு இல்லை. தலைமறைவாகி இருந்தனர்.

மேலும் விடுவிக்கப்பட்ட வாகனங்களும் அங்கு இல்லை. இதன்காரணமாக என்ன செய்வதென்று தெரியாத போலீசார், சில மணி நேர போராட்டத்துக்கு பின்னர் 2 வாகனங்களை பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் அதில் 2 பேர் மட்டுமே சேர்க்கப்பட்டிருந்தனர்.

இந்தநிலையில், மணல் கடத்தலில் ஈடுபட்டு, போலீசாரை மிரட்டிய தி.மு.க. நிர்வாகி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி இருந்தார். இதனால் வழக்கின் வேகம் மேலும் துரிதமானது. விடுவிக்கப்பட்டவர்களையும், வாகனங்களை பறிமுதல் செய்யும் முனைப்பில் போலீசார் தீவிரம் காட்டினர்.

அதன்படி ஏற்கனவே 2 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். அத்துடன் தலைமறைவாக இருந்த டிரைவர்களான கார்த்திகேயன் (வயது 25), பவுல் சேகர் (28), மனோகர் (36) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் உடந்தையாக இருந்ததாக அருள்சேசுராஜ்(28), சவுரி(51) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

இதுஒருபுறம் இருக்க இந்த சம்பவத்தின் முக்கிய நபராக சொல்லப்படும் மணப்பாறை கிழக்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் ஆரோக்கிசாமியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார். அதேபோல் மணல் கடத்தலில் ஈடுபட்டபோது, தனிப்படை போலீசாரால் பிடிக்கப்பட்டு, போலீஸ்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டவர்களை விடுவித்ததாக மணப்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகனை பணியிடைநீக்கம் செய்து திருச்சி சரக டி.ஜ.ஜி. ராதிகா உத்தரவிட்டுள்ளார்.

Next Story