சென்னையில் கனமழை; அடுத்த 2 நாட்களுக்கு நீடிக்கும்: மக்கள் மகிழ்ச்சி


சென்னையில் கனமழை; அடுத்த 2 நாட்களுக்கு நீடிக்கும்:  மக்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 17 July 2021 3:52 PM GMT (Updated: 17 July 2021 3:52 PM GMT)

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் கனமழை பெய்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.



சென்னை,

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு சென்னையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.  சென்னை, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று மாலை பரவலாக கனமழை பெய்தது.

இதேபோன்று, சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் நேற்று மாலை காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.  சென்னையில் கிண்டி, தியாகராய நகர், சைதாப்பேட்டை, தாம்பரம், பல்லாவரம், கே.கே. நகர், ராமபுரம், வடபழனி, கோயம்பேடு, அம்பத்தூர், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.

சென்னை, காஞ்சீபுரம், மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை காரணமாக வெப்பம் தணிந்து பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் கனமழை பெய்துள்ளது.  சென்னையின் புறநகர் பகுதிகளான அம்பத்தூர், தாம்பரம், உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை கொட்டியது.  நகர பகுதிகளான கிண்டி, தியாயராய நகர், அண்ணாநகர், எழும்பூர் உள்ளிட்ட பல இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது.  தமிழகத்தின் 7 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

சென்னையில் கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.  இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். ஒரு சில இடங்களில் மேகமூட்டம் காணப்பட்டது.  ஆனால் மழை பெய்யாமல் பொய்த்தது.


Next Story