பிரதமர் வீடுகட்டும் திட்டத்தில் ரூ.35 லட்சம் மோசடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட 18 பேர் மீது வழக்கு


பிரதமர் வீடுகட்டும் திட்டத்தில் ரூ.35 லட்சம் மோசடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட 18 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 18 July 2021 6:58 PM GMT (Updated: 18 July 2021 6:58 PM GMT)

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் உண்மையான பயனாளிகளுக்கு ஒதுக்கிய ரூ.35 லட்சத்தை கையாடல் செய்து முறைகேட்டில் ஈடுபட்ட 3 வட்டார வளர்ச்சி அதிகாரிகள், என்ஜினீயர் உள்ளிட்ட 18 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நெக்னாமலை ஊராட்சி புருஷோத்தமகுப்பம் கிராமத்தில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 10-ந் தேதி பெய்த கனமழையில் ஓலைவீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்ததில் அய்யம்மாள் (வயது 60) என்பவர் உயிரிழந்தார்.

அவருக்கு, பாரத பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் வீடுகட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அதனை அய்யம்மாளுக்கு வழங்காமல் ஊராட்சி செயலாளர், கையாடல் செய்துவிட்டதாக புகார் எழுந்தது.

வீடு கட்டியிருந்தால் அய்யம்மாள் உயிரிழந்திருக்க மாட்டார் என்றும் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.

அதிகாரிகள் முறைகேடு அம்பலம்

தொடர்ந்து, ஆலங்காயம் ஊராட்சியில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு துறை விசாரிக்க உத்தரவிடப்பட்டது.

ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்தில் 2017-18-ம் ஆண்டுகளில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் கிராம ஊராட்சிகளில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். அந்த பட்டியலை ஆய்வு செய்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது, சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த அய்யம்மாள் உள்பட 23 பேருக்கு வீடு கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அரசின் ஆவணங்களில் இருந்தது. ஆனால், மேற்கண்ட 23 பேருக்கு நிதி ஒதுக்கீடு சென்று சேரவில்லை என்பதை லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்டு பிடித்தனர்.

இந்த திட்டத்தில் தகுதி இல்லாத நபர்களை சேர்த்து பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பதை உறுதி செய்தனர். சுமார் 23 பயனாளிகள் தரப்பில் இருந்து மட்டும் ரூ.35 லட்சத்து 31 ஆயிரத்து 517 தொகையை இவர்கள் கூட்டாக முறைகேடு செய்திருப்பது தெரியவந்தது.

18 பேர் மீது வழக்குப்பதிவு

அதன்பேரில் ஆலங்காயம் ஒன்றியத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் நிதி கையாடல் செய்ததற்கான ஆதாரங்களின் அடிப்படையில் 2017-18-ம் ஆண்டு ஆலங்காயம் கிராம ஊராட்சிகளின் பிரிவில் வட்டார வளர்ச்சி அலுவலர்களாக பணியாற்றிய ரமேஷ்குமார் (தற்போது வேலூர் மாவட்ட தணிக்கை பிரிவு உதவி இயக்குனர்), வசந்தி (தற்போது திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மேலாளர்), வின்சென்ட் ரமேஷ் பாபு (தற்போது வேலூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்), ஆலங்காயத்தில் மண்ட துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றிய அருண்பிரசாத், தலைமையிடத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றிய ரமேஷ்பாபு, தலைமையிடத்து துணை வட்டாரவளர்ச்சி அலுவலர் (தணிக்கை) சீனிவாசன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று ஓவர்சீயர்கள் அழகுராசு (56), ஞானபிரசாத் (39), தாமரைசெல்வன் (52), உதவி என்ஜினீயர் கார்த்திகேயன் (46), ஊராட்சி செயலாளர்கள் வஜ்ஜிரவேல் (ஆலங்காயம்), சுரேந்திரன் (பள்ளிப்பட்டு), எம்.எஸ்.முரளி (தேவஸ்தானம்), ராஜேந்திரன் (ஜாப்ராபாத்), கணபதி (செட்டியப்பனூர்), பூபாலன் (கிரிசமுத்திரம்), பாண்டியன் (மதனஞ்சேரி), சிவா (வளையாம்பட்டு) உள்ளிட்ட 18 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இறந்தவர்களின் பெயரில்...

இதுகுறித்து விசாரணை அதிகாரிகள் கூறும்போது, ‘‘பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில், ஆலங்காயம் ஒன்றியத்தில் பயனாளிகள் பட்டியலை தயாரித்து அவர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ததாக கணக்கு மட்டும் இவர்கள் எழுதி விட்டு கூட்டாக சேர்ந்து கையாடல் செய்துள்ளனர்.

10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவர்களின் பெயர்களையும் பட்டியலில் சேர்த்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர். அதன்பேரில் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, 18 பேரும் படிப்படியாக விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள்’’ என தெரிவித்தனர்.

Next Story