மதுசூதனன் உடல்நிலை தொடர்பான வதந்திகளை நம்பவேண்டாம்: அதிமுக டுவிட்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 20 July 2021 4:45 AM GMT (Updated: 20 July 2021 5:23 AM GMT)

அவைதலைவர் மதுசூதனனின் உடல்நிலை தொடர்பான வதந்திகளை நம்பவேண்டாம் என்று அதிமுக தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளது.

சென்னை,

முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. அவைத்தலைவருமான இ.மதுசூதனன் (வயது 80) கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின்னர் அவர் உடல்நலம் தேறினார். அதன்பின்னர் வயது முதிர்வு காரணமாக அவர் அரசியல் பணிகளில் இருந்து ஒதுங்கினார். சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் தொடர்ந்து ஓய்வில் இருந்து வந்தார்.

எனினும் அவ்வப்போது அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார். இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் மதுசூதனன் உடல்நிலை திடீரென மோசம் அடைந்தது. இதையடுத்து அவர், சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

டாக்டர்கள் நடத்திய பரிசோதனையில் மதுசூதனனின் உடலில் பல உறுப்புகள் செயலிழந்து இருப்பது தெரியவந்தது. தற்போது அவர் தீவிர சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு ‘வென்டிலேட்டர்’ பொருத்தப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் டாக்டர்களின் நேரடி கட்டுப்பாட்டில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் அவைதலைவர் மதுசூதனனின் உடல்நிலை தொடர்பான வதந்திகளை நம்பவேண்டாம் என்று அதிமுக கழகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அதிமுக அலுவலகம் தனது டுவிட்டரில், “கழக அவைதலைவர் திரு. மதுசூதனன் அவர்களின் உடல்நிலை தொடர்பான வதந்திகளை நம்பவேண்டாம், தீவிர சிகிச்சை தொடர்வதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல்” என்று பதிவிட்டுள்ளது. 

Next Story