'தமிழகத்தில் தி.மு.க.வுக்கு எதிரி பா.ஜ.க.தான்' அண்ணாமலை பேட்டி


தமிழகத்தில் தி.மு.க.வுக்கு எதிரி பா.ஜ.க.தான் அண்ணாமலை பேட்டி
x
தினத்தந்தி 20 July 2021 9:11 PM GMT (Updated: 20 July 2021 9:11 PM GMT)

தமிழகத்தில் பேச்சு அரசியலில் தி.மு.க.வுக்கு எதிரி பா.ஜ.க.தான் என்று அண்ணாமலை கூறினார்.

சென்னை,

சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்தியாவில் இருக்கக்கூடிய அரசியல் தலைவர்கள், பணக்காரர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் யாரும் ‘பெகாசஸ்’ செயலி மூலம் உளவு பார்க்கப்படவில்லை.

வேண்டும் என்றே திட்டமிட்டு நாடாளுமன்றம் கூடுவதற்கு முதல் நாள் இந்த குற்றச்சாட்டு பரப்பப்பட்டு நாடாளுமன்றம் முடக்கப்பட்டு உள்ளது.

எதிரி கட்சி

புதிய மந்திரிசபையில் இடம் பெற்றவர்களை கூட, பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்துவைக்க கூட நேரம் கொடுக்காமல் அவையை எதிர்க்கட்சிகள் முடக்கி உள்ளன. எந்தவித முகாந்திரமும் இல்லாமல் அரசியல் நோக்கத்திற்காக நாடாளுமன்ற கூட்டத்தில் நல்ல விஷயங்கள் நடக்கக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக கவர்னர் மாளிகையை நாங்கள் முற்றுகையிட போகிறோம் என்று கிளம்பி போகிறார்கள்.

இது என்ன மாதிரி அரசியல் என்று தெரியவில்லை? எதிர்க்கட்சியாக இருக்கலாம் எதிரி கட்சியாக ஏன் இருக்க வேண்டும் என்பதுதான் எங்களுக்கு புரியவில்லை.

தி.மு.க.வுக்கு மாற்று பா.ஜ.க. தான்

தமிழகத்தில் தி.மு.க.வுக்கு மாற்று பா.ஜ.க.தான். என்ன காரணம் என்றால், தி.மு.க. எழுப்பும் விஷயங்கள் அனைத்தும் எங்களை எதிர்த்துதான். அவர்கள் சொல்லும் ஒவ்வொரு விஷயமுமே பா.ஜ.க.வை எதிர்த்துதான். எனவே, பேச்சு அரசியலில் நாங்கள்தான் அவர்களுக்கு எதிரி. எங்களுக்கு அவர்கள்தான் எதிரி. எங்கள் 2 பேருக்கும்தான் யுத்தம் நடக்கிறது. இது 2 முனை போட்டியாக போய்க்கொண்டு இருக்கிறது.

அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணி சிறப்பாக போய்க்கொண்டு இருக்கிறது.

விசாரணை தேவையில்லை

செல்போன் ஒட்டு கேட்பு விஷயத்திற்காக நீதி விசாரணை, நீதிபதி விசாரணை, நாடாளுமன்ற குழுவை வைத்து விசாரணை என்பது எல்லாம் தேவையற்றது. ஒரு முகாந்திரம் இருந்து விசாரணை மேற்கொண்டால் ஜனநாயகத்துக்கு மரியாதை. அரசியல் லாபத்துக்காக ஒவ்வொரு விஷயத்திற்கும் நீதி விசாரணை ஆரம்பித்தோம் என்றால், இந்தியாவில் எப்போதும் 20 ஆயிரம் நீதி விசாரணை நடந்து கொண்டேதான் இருக்கும். எந்த முகாந்திரமே இல்லாமல் இருக்கும்போது எதற்கு விசாரணை தேவை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story