சுதந்திரம் பெற்று 75-வது ஆண்டை குறிக்கும் வகையில் சென்னை கடற்கரை சாலையில் நினைவு தூண் அமைக்கும் பணிகள் தொடக்கம்


சுதந்திரம் பெற்று 75-வது ஆண்டை குறிக்கும் வகையில் சென்னை கடற்கரை சாலையில் நினைவு தூண் அமைக்கும் பணிகள் தொடக்கம்
x
தினத்தந்தி 20 July 2021 10:09 PM GMT (Updated: 20 July 2021 10:09 PM GMT)

சென்னை கடற்கரை சாலையில் ஜனாதிபதி விரைவில் அடிக்கல் நாட்ட இருக்கும் நினைவு தூணுக்கான ஆரம்பகட்ட பணிகளை தமிழக அரசு தொடங்கி உள்ளது.

சென்னை,

தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழாவை கொண்டாட அரசு திட்டமிட்டுள்ளது. இந்த விழாவில் முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதியின் உருவப்படத்தை சட்டசபை வளாகத்தில் திறப்பது, மதுரையில் கருணாநிதியின் பெயரில் நூலகம் மற்றும் சென்னை கிண்டியில் கட்டப்பட இருக்கும் அரசு பன்னோக்கு மருத்துவமனை மற்றும் சுதந்திரம் பெற்று 75-வது ஆண்டைக் குறிக்கும் வகையில் சென்னை கடற்கரை சாலையில் நினைவுத் தூண் ஆகியவற்றுக்கான அடிக்கல் நாட்டு விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை டெல்லிக்கு சென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து வந்து உள்ளார். இதற்கான விழா தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. விரைவில் இதற்கான விழா நடக்க இருப்பதால், நூற்றாண்டு விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழாக்களுக்கான ஆரம்ப கட்டப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

நினைவு தூண்

குறிப்பாக சென்னை கடற்கரை சாலையில் உள்ள காமராஜர் சாலை, ராஜாஜி சாலை, கொடி மர சாலை சந்திப்பில் உள்ள போர் நினைவு சின்னம் அருகில் உள்ள ரவுண்டானாவில், சுதந்திரம் பெற்று 75-வது ஆண்டைக் குறிக்கும் வகையில் சென்னை கடற்கரை சாலையில் நினைவுத் தூண் அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகளை தமிழக அரசு தொடங்கி உள்ளது.

குறிப்பாக ரவுண்டானாவை சுற்றிலும் பாதுகாப்பு கருதி இரும்பு தகடுகளால் வேலி அமைக்கப்பட்டு கட்டுமானத்திற்கு வசதியாக உள்புறம் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. அத்துடன் சுமார் 30 அடி உயரத்தில் நினைவுத் தூண் அமைப்பதற்கு தேவையான இரும்பு கம்பிகள் மற்றும் கட்டுமானப் பொருட்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன. முறையாக ஜனாதிபதி அடிக்கல் நாட்டிய பிறகு கட்டுமானம் வேகமெடுக்கும்.

தூண் உச்சியில் அசோக சக்கரம்

நினைவுத் தூண் மேலே அசோக சக்கரமும், நினைவுத் தூணை சுற்றிலும் ராணுவ வீரர்கள் வாிசையாக நிற்பது போன்ற மாதிரி படத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தயாரித்து உள்ளனர். இந்த நினைவுத் தூண் கான்கிரீட் கட்டுமானத்துடன் அமைக்கப்பட்டு அதில், கிரானைட் கற்களால் பதிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நாட்டுக்காக உயிர்தியாகம் செய்த வீரர்களை போற்றும் வகையில் அவர்களுடைய பெயர்களும், அவர்கள் செய்த தியாகங்களும் பதிவு செய்யவும் திட்டமிடப்பட்டு உள்ளது. சுதந்திரம் பெற்று 75 ஆண்டை குறிக்கும் வகையில் இந்த நினைவிடம் அமைய இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் நினைவுத் தூணில் மரியாதை செலுத்துவதற்கான வசதிகளும் செய்து தரப்பட உள்ளது.

மேற்கண்ட தகவல்களை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story