பெகாசஸ் உளவு விவகாரம்: அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் - கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்


பெகாசஸ் உளவு விவகாரம்: அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் - கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 21 July 2021 8:02 AM GMT (Updated: 21 July 2021 8:02 AM GMT)

பெகாசஸ் உளவு விவகாரத்தில் உள்துறை மந்திரி அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலிறுத்தியுள்ளார்.

புதுடெல்லி,

இஸ்ரேல் நாட்டு நிறுவனம் உருவாக்கிய ‘பெகாசஸ்’ என்ற உளவு மென்பொருள், மூலம் 50 நாடுகளை சேர்ந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட தனிநபர்களின் செல்போன் எண்கள் உளவுபார்க்கபட்டதாக கூறப்படுகிறது. அந்த பட்டியலில், 189 பத்திரிகையாளர்கள், 600-க்கு மேற்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள், 65 தொழிலதிபர்கள், 85 மனித உரிமை இயக்கவாதிகள், பல்வேறு நாட்டு தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்தியாவை சேர்ந்த 300-க்கு மேற்பட்டோரின் செல்போன் எண்களும் உள்ளன. அவர்களில் 2 மந்திரிகள், 3 எதிர்க்கட்சி தலைவர்கள், ஒரு நீதிபதி, 40-க்கு மேற்பட்ட பத்திரிகையாளர்கள், தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரும் உளவு பார்க்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் பூதகரமாகியுள்ள நிலையில் நாடு முழுவதும் கவர்னர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்திருக்கிறது.

இந்நிலையில் பெகாசஸ் உளவு விவகாரத்தில் உள்துறை மந்திரி அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலிறுத்தியுள்ளார். இதுதொடர்பாக சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி, “இந்தியாவில் இஸ்ரேல் உளவு பார்த்த விவகாரத்தில் உள்துறை மந்திரி அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும். ஒட்டுக்கேட்பு தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இந்த உளவு விவகாரம் தொடர்பாக நீதிபதியை நியமித்து சுப்ரீம்கோர்ட்டு கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும். அப்போதுதான் இந்தியாவின் ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும்” என்று அவர் தெரிவித்தார். 

Next Story