முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுக, அமமுக நிர்வாகிகள்


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுக, அமமுக நிர்வாகிகள்
x
தினத்தந்தி 21 July 2021 8:22 AM GMT (Updated: 21 July 2021 8:22 AM GMT)

ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட ஏழு மாவட்டங்களை சேர்ந்த பிற கட்சியினர் தி.மு.கவில் இணைந்தனர்.

சென்னை, 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட ஏழு மாவட்டங்களை சேர்ந்த மாற்றுக்கட்சியினர் தங்களைத் திமுகவில் இணைத்துக்கொண்டனர். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்தவருமான வ.து. நடராஜன், இவரது மகனும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ராமநாதபுரம் மாவட்டச் செயலாளராக இருந்தவருமான வ.து.ந.ஆனந்த் ஆகிய இருவரும் திமுகவில் இணைந்தனர். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் ஒரத்தநாடு சேகர் என அமமுகவின் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர். 

மேலும் சேலம், ஈரோடு, தருமபுரி, நாமக்கல், தஞ்சாவூர், ராமநாதபுரம், கன்னியாகுமரி என்று 7 மாவட்டங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணைந்தனர். புதிதாக இணைந்த மாற்று கட்சியினருக்கு புத்தகம் மற்றும் திமுக கரை வேட்டிகளை பரிசளித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, மாவட்டச் செயலாளர் சுரேஷ்ராஜன், முன்னாள் எம்எல்ஏ., ஆஸ்டின் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story