மாநில செய்திகள்

அம்பாசமுத்திரம் ஆற்றுமணல் கடத்தல் வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் - ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவு + "||" + Madurai High Court branch transferred Ambasamudram sand smuggling case to CBCID

அம்பாசமுத்திரம் ஆற்றுமணல் கடத்தல் வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் - ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவு

அம்பாசமுத்திரம் ஆற்றுமணல் கடத்தல் வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் - ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவு
அம்பாசமுத்திரத்தில் ஆற்றுமணல் கடத்தியது தொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை,

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த கிறிஷ்டி என்பவர் ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், அம்பாசமுத்திரம் அருகேயுள்ள பொட்டல் கிராமத்தில் எம்.சாண்ட் குவாரிக்காக அனுமதி பெற்று, சட்டவிரோதமாக ஆற்றுமணல் எடுத்து கேரள மாநிலத்திற்கு கடத்தப்படுகிறது என குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து ஆய்வு செய்த வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் சட்டவிரோதமாக ஆற்றுமணல் எடுத்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் வழக்கை காவல்துறையினர் உரிய முறையில் விசாரிக்கவில்லை என்றும் இந்த வழக்கு விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், “இந்த வழக்கில் 27 ஆயிரம் கியூபிக் மீட்டர் ஆற்று மணல் சட்டவிரோதமாக திருடப்பட்டுள்ளது. சட்டவிரோத மணல் கடத்தலுக்கு உபயோகப்படுத்தப்பட்டுள்ள லாரிகள் பறிமுதல் செய்யும் போது அதில் அரசு வழங்கும் போக்குவரத்து அனுமதி சீட்டு கையெழுத்து இல்லாமலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகளும் சம்மந்தப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது” என்று தெரிவித்தனர்.

இதையடுத்து இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதே சமயம் கல்லிடைக்குறிச்சி காவல்துறையினர் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் இந்த வழக்கு தொடர்பாக மணல் எடுப்பதற்கு அனுமதி கொடுத்த இடத்தில் திடீர் ஆய்வு நடத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணையை நீதிபதிகள் முடித்து வைத்துள்ளனர்.