மாநில செய்திகள்

டெங்கு காய்ச்சலைத் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் - சென்னை மாநகராட்சி + "||" + Public should cooperate to prevent dengue fever - Chennai Corporation

டெங்கு காய்ச்சலைத் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் - சென்னை மாநகராட்சி

டெங்கு காய்ச்சலைத் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் - சென்னை மாநகராட்சி
சென்னையில் டெங்கு காய்ச்சலைத் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
சென்னை,

இதுகுறித்துச் சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

''பெருநகர சென்னை மாநகராட்சியில் டெங்கு காய்ச்சலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது கொசு ஒழிப்புப் பணிக்கென 1,262 நிரந்தர கொசு ஒழிப்புப் பணியாளர்களும், 2,359 ஒப்பந்தப் பணியாளர்களும் என மொத்தம் 3,621 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மேலும், டெங்கு தடுப்புப் பணியில் 6,000 காய்ச்சல் கணக்கெடுப்புப் பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சென்னை மாநகரில் உள்ள பகுதிகள் 500 வீடுகள் கொண்ட சிறு வட்டங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு வட்டத்திற்குட்பட்ட தெருக்களில் வாரந்தோறும் கொசுப்புழு வளரிடங்களான மேல்நிலை/ கீழ்நிலைத் தொட்டி, கிணறு, டயர்கள், உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள் போன்ற தேவையற்ற பொருட்களைக் கண்டறிந்து கொசுப் புழுக்கள் இருப்பின் அதனை அழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் 256 கைத்தெளிப்பான்கள் மற்றும் 167 அதிவேக திறன் கொண்ட கைத்தெளிப்பான்களைக் கொண்டு குடிசைப் பகுதிகள், பள்ளிகள், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்கள், மழைநீர் வடிகால்கள் மற்றும் திறந்தவெளிக் கால்வாய்களிலும் கொசுப்புழு அழிக்கும் மருந்துகள் தெளிக்கப்பட்டு, கொசுப் புழுக்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. நீர்நிலைகளில் கொசுப்புழுக்களை உண்ணும் கம்பூஃசியா என்னும் மீன்கள் விடப்பட்டு கொசுப் புழுக்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.

வாகனத்தில் எடுத்துச்செல்லும் 68 புகை பரப்பும் இயந்திரங்கள், கையால் எடுத்துச் செல்லும் 287 புகை பரப்பும் இயந்திரங்கள் மற்றும் 12 சிறிய வகை புகை பரப்பும் இயந்திரங்களைக் கொண்டு முதிர் கொசுக்களைக் கட்டுப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், நீர்வழித் தடங்களில் பணியாளர்களின் பாதுகாப்பு நலன் கருதி மனித ஆற்றல் பயன்படுத்தப்படுவதைத் தவிர்க்கவும், நேரத்தை மிச்சப்படுத்தும் வகையிலும் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் டிரோன் மூலம் சோதனை முறையில் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

எனவே, பொதுமக்கள் தங்களின் வீடு மற்றும் சுற்றுப்புறத்தில் தண்ணீர் தேங்கி கொசுப்புழு உருவாகும் வாய்ப்புள்ள டயர், தேங்காய் சிரட்டைகள், உடைந்த குடங்கள், உபயோகமற்ற பொருட்கள், உடைந்த சிமெண்ட் தொட்டிகள் முதலியவற்றை உடனடியாக அகற்ற வேண்டும். மேலும், கிணறு, மேல்நிலைத் தொட்டி, கீழ்நிலைத் தொட்டி, தண்ணீர் தொட்டிகள் முதலியவற்றைக் கொசுக்கள் மற்றும் கொசுப்புழு புகாவண்ணம் மூடி வைக்க வேண்டும்.

தண்ணீர் நிரப்பிய பூ ஜாடி மற்றும் கீழ்த்தட்டு, குளிர்பதனப் பெட்டியின் கீழ்த்தட்டு, மணி பிளான்ட் போன்றவற்றில் தேங்கி நிற்கும் தண்ணீரை வாரமொரு முறை அகற்றி தங்களின் வீடு மற்றும் சுற்றுப்புறத்தைத் தூய்மையாகப் பராமரித்து மாநகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வெளியூர்களுக்குச் செல்லும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சேமித்து வைத்துள்ள தண்ணீரைக் கொசுக்கள் புகாத வண்ணம் மூடிவைத்துச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்''.

இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. அரசு வழங்கிய வீட்டுமனையை அளவீடு செய்து கொடுக்காததை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
அரசு வழங்கிய வீட்டுமனையை அளவீடு செய்து கொடுக்காததை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.
2. கொரோனா 2வது அலை இன்னும் முடியவில்லை; விழிப்புடன் செயல்பட வேண்டும் - அமைச்சர் ஹர்ஷ்வர்தன்
மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் கொரோனாவை வெல்ல வாய்ப்புள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
3. கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு தவறிவிட்டது - தேவேகவுடா குற்றச்சாட்டு
கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு தவறிவிட்டது என்று முன்னாள் பிரதமர் தேவேகவுடா குற்றம் சாட்டியுள்ளார்.
4. 7-வது நாளாக விற்பனை: கொளுத்தும் வெயிலிலும் ‘ரெம்டெசிவிர்’ மருந்துக்காக காத்திருக்கும் பொதுமக்கள்
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 7-வது நாளாக ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படுகிறது. மருந்துக்காக கொளுத்தும் வெயிலிலும், இரவில் சாலையோரத்திலும் பொதுமக்கள் காத்துக்கிடக்கின்றனர்.
5. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி விற்பனைக்கு தடை எதிரொலி; வெள்ளிக்கிழமையான நேற்றே காசிமேடு மீன் சந்தையில் குவிந்த பொதுமக்கள்
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால் நேற்று காசிமேடு மீன் சந்தையில் மீன் வாங்க பொதுமக்கள் குவிந்தனர். முககவசம் அணியாதவர்களிடம் போலீசார் ரூ.200 அபராதம் வசூலித்தனர்.