மீனவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் தேசிய கடல் மீன்வள ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்த கூடாது


மீனவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் தேசிய கடல் மீன்வள ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்த கூடாது
x
தினத்தந்தி 21 July 2021 6:59 PM GMT (Updated: 21 July 2021 6:59 PM GMT)

மீனவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் தேசிய கடல் மீன்வள ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்த கூடாது மத்திய அரசுக்கு சரத்குமார் வலியுறுத்தல்.

சென்னை,

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இயற்கை அளித்த கொடைகளில் ஒன்றான கடலில், தொன்றுதொட்டு சுதந்திரமாக மீன் பிடித்து வரும் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்படி, மத்திய அரசு தேசிய கடல் மீன்வள ஒழுங்குமுறை சட்டத்தை கொண்டு வரவிருப்பது ஏற்புடையதல்ல.

கடலில் எல்லைகளை வரையறுப்பது, அனைத்து வகை படகுகளுக்கும் கட்டணம் விதிப்பது, ஒவ்வொரு முறை மீன்பிடிக்க செல்லும்போதும் அனுமதி பெற செய்வது, அனுமதி பெறாதவர்களுக்கு அபராதம், சிறை தண்டனை விதிப்பது, எப்போது வேண்டுமானாலும் எந்த ஒரு பகுதியையும் மீன்பிடி தடை பகுதியாக அறிவிப்பது, அனுமதி பெற்ற வலையை தவிர பிற வலையை உபயோகிக்க கூடாது என்பது உள்ளிட்ட மீனவர்கள் விரும்பாத பல அம்சங்களுடன், தேசிய கடல் மீன்வள ஒழுங்குமுறை சட்டம் கொண்டுவரப்படவுள்ளது. துரிதமாக இத்தகைய சட்ட மசோதாவை கொண்டு வருவதற்கான அவசியம் என்ன? என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

தேசிய கடல் மீன்வள ஒழுங்குமுறை வரைவு சட்டத்தை அமல்படுத்த கூடாது. எக்காரணத்தை கொண்டும் இத்திட்டம் மக்களவையில் நிறைவேற்றப்படாமல் இருப்பதற்கு தமிழக அரசு தீவிர முயற்சி எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story