நீர்ப்பாசன திட்டங்களுக்கு தடை விதிக்கக்கோரி வழக்கு தொடுப்பதா? கர்நாடக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்


நீர்ப்பாசன திட்டங்களுக்கு தடை விதிக்கக்கோரி வழக்கு தொடுப்பதா? கர்நாடக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
x
தினத்தந்தி 21 July 2021 9:18 PM GMT (Updated: 21 July 2021 9:18 PM GMT)

தமிழகத்தில் நிறைவேற்றப்பட உள்ள நீர்ப்பாசன திட்டங்களுக்கு தடை விதிக்கக்கோரி வழக்கு தொடுத்ததற்கு கர்நாடக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்புக்கு முற்றிலும் எதிரான வகையிலும், சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கும் வழக்கினை முற்றிலும் புறக்கணிக்கும் வகையிலும் மேகதாதுவில் அணை கட்டப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்ததற்கு தமிழ்நாட்டின் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத்திட்டம் உள்ளிட்ட தமிழ்நாட்டுக்குள் நிறைவேற்றப்பட உள்ள நீர்ப்பாசன திட்டங்களுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

வெள்ளப்பெருக்கின்போது காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் இருந்து கடலில் கலக்கும் உபரி நீரை திருச்சி, புதுக்கோட்டை சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் கரூர் மாவட்டங்களில் வசிக்கும் மக்களின் குடிநீர் தேவைக்கும், லட்சக்கணக்கான ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுவதற்கும் திருப்பிவிட ஏதுவாக நீண்ட நாள் கனவுத் திட்டமான காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத்திட்டம் தீட்டப்பட்டு, ரூ.14 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான இந்த திட்டத்தின் முதல்கட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 14-ந் தேதி நடந்தது.

ஒப்பந்தம்

இந்த சூழ்நிலையில் மேகதாது அணை கட்டப்பட்டால் டெல்டா பகுதி பாலைவனமாகிவிடும் என்பதால் அந்த திட்டத்துக்கு தமிழ்நாடு ஒப்புதல் தரவில்லை என்பதற்காக வேண்டுமென்றே தங்களுக்கு தொடர்பில்லாத, தமிழ்நாட்டில் நிறைவேற்றப்படவிருக்கும் நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு தடை கேட்டு கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது நியாயமற்ற செயல்.

சென்னை மாகாணத்துக்கும், மைசூர் மாகாணத்துக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின்படி சென்னை மாகாண அரசின் அனுமதியின்றி மைசூர் மாகாண அரசு காவிரி நீரை தடுக்கும் வகையில் அணைகளை கட்டக்கூடாது.

பொறாமையின் வெளிப்பாடு

காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம், மேட்டூர்-சரபங்கா நீரேற்று திட்டம், கடலூர், நாகை, கரூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கதவணைகள் கட்டும் திட்டம் ஆகியவற்றை செயல்படுத்துவதன் காரணமாக தமிழ்நாட்டில் வீணாக கடலில் கலக்கும் உபரி நீர் தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்கு திருப்பிவிடப்படுமே தவிர, கர்நாடகத்துக்கு எந்தவித பாதகமும் ஏற்படாது. எனவே தமிழ்நாட்டுக்குள் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவிப்பது என்பது பொறாமையின் வெளிப்பாடு.

இதன்மூலம், உபரி நீர் கடலில் கலந்தாலும் பரவாயில்லை, தமிழ்நாட்டு மக்களுக்கு பயன்படக்கூடாது என்ற கர்நாடக அரசின் கெடுமதி எண்ணம் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. சென்னை-மைசூர் மாகாணங்களுக்கு இடையேயான ஒப்பந்தத்தை மீறி வீணாக கடலில் கலக்கும் உபரி நீரை தமிழ்நாட்டில் உள்ள பிற மாவட்டங்களுக்கு திருப்பி எடுத்துச் செல்லும் திட்டம் உள்பட தமிழ்நாட்டின் நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு தடை விதிக்கவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்ய கர்நாடக அரசுக்கு எந்தவித முகாந்திரமும் இல்லை. இந்த மனு முளையிலேயே கிள்ளி எறியப்படவேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் எதிர்பார்ப்பு.

சட்டப்பூர்வ நடவடிக்கை

எனவே, தமிழக முதல்-அமைச்சர் இதில் உடனடியாக கவனம் செலுத்தி, காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம், மேட்டூர்-சரபங்கா நீரேற்று திட்டம், கடலூர், நாகை, கரூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கதவணைகள் கட்டும் திட்டம் ஆகியவற்றுக்கு தடை கோரி கர்நாடக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை உடனடியாக தள்ளுபடி செய்வதற்கு தேவையான சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story